Mullai Periyar Dam Issue | கேரள அரசை தட்டிக்கேளுங்கள்.. திமுக கூட்டணி கட்சிகளை விளாசும் ஓ.பி.எஸ்.!

By manimegalai aFirst Published Nov 13, 2021, 12:44 PM IST
Highlights

கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக மாநில உரிமை பரிபோகின்ற விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படாமல் இருக்கக் கூடாது. கூட்டணி தர்மத்திற்காக கட்சிகள் வாய் மூடி மவுனம் காப்பது வியப்பாக இருக்கிறது.

கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக மாநில உரிமை பரிபோகின்ற விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படாமல் இருக்கக் கூடாது. கூட்டணி தர்மத்திற்காக கட்சிகள் வாய் மூடி மவுனம் காப்பது வியப்பாக இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் தட்டிக் கேட்க வேண்டும். அத்துடன் இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பினில் கூறியுள்ளது. அதனடிப்படையில், கேரள அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அவர்கள் 15 மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி அளித்து அதற்கான ஆணையை கம்பத்தில் உள்ள நீர் ஆதார தூறை செயற் பொறியாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆணையுடன் இணைக்கப்பட்ட பட்டியலில் எந்தெந்த மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், கேரள அரசிற்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத் துறை அமைச்சர் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தமக்கு த்ரியாது என்றும், இது குறித்த முடிவை அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது, இது கொள்கை சம்மந்தப்பட்ட முடிவு, இதுகுறித்து கேரள முதலமைச்சருக்கோ, நீர் பாசனத் துறை அமைச்சருக்கோ, வனத் துறை அமைச்சருக்கோ எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மரங்களை வெட்டுவதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேரள முதலமைச்சருக்கு தெரியாமல் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கும், என்பதை நம்பும்படியில்லை. மேலும் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதில் கேரள அரசு உறுதியாக இருப்பதாகவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள முதலமைச்சர்களுக்கு இடையேயான கூட்டத்தில் இதுபற்றி பேச இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்காக இந்திய வனப் பணி அதிகாரியான முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் அவர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்திய அதிகாரியை பணியிடை நீக்கம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்பதோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பாகும்.

மரங்களை வெட்ட அனுமதி அளித்த ஆணை வெளிவந்த மறு வினாடியே கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து மவுனமாக இருப்பது வியப்பாக இருக்கிறது. நீர்வளத் துறை அமைச்சரோ இது அம்மாநில அரசு அலுவலர்களுக்கும் அமைச்சரும் சம்மந்தப்பட்ட விஷயம், அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று மழுப்பலான பதிலைக் கூறி நழுவி விட்டார். திமுக கூட்டணி கட்சிகளும் இதுகுறித்து பேச தயங்குகின்றன. தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனையான முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மவுனமாக இருப்பது தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் செய்கிற துரோகம் ஆகாதா? என்னதான் கூட்டணி தர்மம் என்றாலும் தமிழ்நாட்டின் உரிமை பரிபோகின்ற விஷயத்தில் மவுனம் சாதிப்பது சரிதானா என்பதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு எதிராக இடையூறு அளித்து வரும் கேரள அரசை முதலமைச்சர் தட்டிக்கேட்க வேண்டும். மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும். புதிய அணை கட்டுவது தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில்  ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

click me!