Punith : 2 வயது யானைக் குட்டிக்கு புனித் ராஜ்குமார் பெயர். அப்பு நினைவில் தவிக்கும் கர்நாடக மக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Nov 13, 2021, 12:29 PM IST
Highlights

தாய் யானையை காட்டுக்குள் கட்டிவைத்துவிட்டு குட்டி யானையை முகாமுக்கு அழைத்துச் செல்வோம், குட்டி யானையை பிரிந்த தாய் யானை 10 நாட்களுக்கும் மேலாக ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும், பிறகு சரியாகிவிடும், யானையை இப்போதே பிரிக்காவிட்டால் அதன் அட்டகாசம அதிகமாக இருக்கும்.

கர்நாடக மாநில  மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்த நடிகர் பவர் ஸ்டார் புனித் குமாரின் பெயர் பிறந்து இரண்டு ஆண்டுகளே ஆன குட்டி ஆண் யானைக்கு வைக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அவரது ரசிகர்கள், அம்மாநில மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. திரை உலகிற்கு எத்தனையோ திரைக்கலைஞர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் அவ்வளுவு எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவது இல்லை. ஆனால் தனது நடிப்பால் மட்டுமல்ல உண்மை வாழ்க்கையில்  தனது செயல்பாட்டால், சேவையால்,  அன்பால் கர்நாடக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த கதாநாயகனாக வாழ்ந்து மக்களை மீள முடியாத கண்ணீர் துயரத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்திருக்கிறார் புனித் ராஜ்குமார்.

சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தி சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் கடைசி புதல்வர்தான் புனித் ராஜ்குமார், அம்மாநில மக்களால் பவர்ஸ்டார் என கொண்டாடப்பட்டவர், 46 வயதான அவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதில் அலாதி பிரியம் கொண்டவராக இருந்தார். இந்நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது மறைவு செய்தியைக் கேட்ட ஒட்டுமொத்த கர்நாடக மாநிலம் கண்ணீர் கடலில் தத்தளித்தது. அப்பு என்று செல்லமாக  அழைக்கப்பட்டா அவரை, அப்பு எழுந்து வா.. எழுந்து வா என திரும்பிய பக்கமெல்லாம் அழுகைக் குரல்கள் ஒலித்தன. அதுவரை கர்நாடக மாநிலம் கண்டிராத அளவுக்கு லட்சோப லட்சம் மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்தது. 

அவரின் இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டது, புனித் செய்த அந்த புனித  கொடையால் 4 பேர் பார்வை பெற்றனர், வீட்டிற்கு உதவியான தேடி வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பும் பழக்கம் புனித்துக்கு இல்லை என அம்மாநில மக்கள் கதறி துடித்தனர். கன்னட மக்களின் இதயத்தில் என்றும் நீங்காத இடம் பிடித்த புனித் குமார் நினைவலைகள் இன்னும் அம்மாநில மக்கள் மனதில் இருந்து ஓயவில்லை, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது, இதன் விளைவாக கர்நாடக மாநிலம் சிவமோக்கா மாவட்டத்தில் உள்ள யானைகள் பயிற்சி முகாமில்  பிறந்து இரண்டு ஆண்டுகளே ஆன ஆண் குட்டி யானைக்கு பவர் ஸ்டார் என புனித் குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள சக்கரே பயிலு  யானைகள் பயிற்சி முகாமில் நேத்ரா என்ற யானைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குட்டி யானை பிறந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்த தாயிடம் இருந்து குட்டி யானை பிரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாய் யானையை காட்டில் கட்டிப்போட்டு குட்டி யானையை வேறு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது. இதுகுறித்து தெரிவித்த வனப்பாதுகாவலர் நாகராஜ், குட்டி யானைக்கு இரண்டு வயது ஆனதும் தாய் யானையிடத்தில் இருந்து பிரித்து விடுவது வழக்கம்.  மழைக்காலம் நீடித்ததால் 3 மாதங்கள் அதை பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தாய் யானையை காட்டுக்குள் கட்டிவைத்துவிட்டு குட்டி யானையை முகாமுக்கு அழைத்துச் செல்வோம், குட்டி யானையை பிரிந்த தாய் யானை 10 நாட்களுக்கும் மேலாக ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும், பிறகு சரியாகிவிடும், யானையை இப்போதே பிரிக்காவிட்டால் அதன் அட்டகாசம அதிகமாக இருக்கும். என தெரிவித்த அவர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவதற்கு முன்னர் கடந்த மாதம் சிவமோகா சக்கரே பயிலு யானைகள் முகாமுக்கு வருகை தந்ததுடன், அந்த யானைகள் பயிற்சி பெறுவதை கண்டு ரசித்தார். இந்நிலையில் அவரது நினைவாகவும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், இரண்டு வயதான ஆண் குட்டி யானைக்கு பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக வனக்காவலர் தெரிவித்தார். 

இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில மக்களை உணர்ச்சி வயதில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் இதயம் இமேஜ்கள் மற்றும் நெகிழ்ச்சி மிகுந்த கருத்துக்கள் மூலம் புனித் ராஜ்குமாரின் மீதான அன்பை பொழிந்து வருகின்றனர். இதில் பலர் நல்ல உள்ளங்கள் ஒருபோதும் மறைவதில்லை மண்ணில் இருந்து மறைந்தாலும் அவர்களின் புகழ் வாழ்ந்து கொண்டே இருக்கும் என பதிவிட்டு வருகின்றனர். 
 

click me!