
என் மகனைக் காட்டிலும் யாரும் என்னை அசிங்கப்படுத்தி இருக்க முடியாது, என் மகனே எனக்கு துரோகம் பண்ணிட்டான் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர்முலாயம்சிங் யாதவ் மனம் வெதும்பு புலம்பியுள்ளார்.
கட்சிக்குள் குழப்பம்
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருந்த சில மாதங்களுக்கு முன் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரின் மகனும், முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவுக்கும், அவரின் சித்தப்பா சிவபால்யாதவுக்கும் கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டனர். இறுதியில் தேர்தல் ஆணையம் சென்றபோது, தனது மகனுக்காக கட்சியையும், சின்னத்தையும் முலாயம்சிங் விட்டுக்கொடுத்தார்.
படுதோல்வி
இந்த குடும்பச் சண்டையால் கட்சிக்குள் பெரிய குழப்பம் ஏற்பட்டதையடுத்து தேர்தலிலும் முலாயம்சிங் அதிகமாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இதனால்,சமாஜ்வாதி கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
திறப்புவிழா
இந்நிலையில், மெயின்புரி நகரில் ஒரு ஓட்டல் திறப்பு விழாவுக்கு சமாஜ்வாதிகட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று சென்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது-
அசிங்கப்படுத்திவிட்டார்
என் மகன் அகிலேஷ் யாதவ் எனக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கவில்லை. ஒரு தந்தைக்கு மதிப்பு அளிக்காதவருக்கு, எப்படி மக்கள் மதிப்பு அளிப்பார்கள்?. என் மகனைக் காட்டிலும், என்னை வேறுயாரும் இந்த அளவுக்கு அசிங்கப்படுத்தி இருக்க முடியாது. என் வாழ்கையில் இது போல் அசிங்கப்பட்டதும் இல்லை.
முதல்வராக்கினேன்
இருந்தபோதிலும் நான் பொறுமையாக இருந்தேன். கடந்த 2012ம் ஆண்டு உத்தரப்பிரதேச மக்கள் எனக்காக வாக்களித்தனர். ஆனால், நான் என்மகன்அகிலேஷை முதல்வராக அமரவைத்து அழகுபார்த்தேன்.
யாரும் செய்ய மாட்டார்கள்
நாட்டில் எந்த தலைவரும் தான் உயிரோடு இருக்கும்போது, அரசியலில் உத்வேகத்தோடு இருக்கும் போது மகனை முதல்வராக அமரவைத்தது இல்லை. ஆனால், அதை நான் செய்தேன். ஆனால், அகிலேஷ் ரொம்பவும் என்னைஅசிங்கப்படுத்திவிட்டார். ஒரு தந்தைக்கு துரோகம் இழைத்த மகனால், எப்படி உங்களுக்கு உண்மையாக இருக்க முடியும்?.
மோடி பேசியது உண்மைதான்
தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி தந்தைக்கே உண்மையில்லாத நபர் உங்களுக்கு விசுவாசமாக இருப்பாரா? என்று கேட்டார். அது உண்மைதான். தேர்தல் தோல்விக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம், சண்டையும் ஒரு காரணம்.
காங்.கூட்டு அழிவு
எனது ரத்தமே எனக்கு எதிராக வேலை செய்கிறது, எதிராக இருக்கிறது என யாரிடமும் நான் சொல்லவில்லை. என் மீது 3 முறை கொலைசெய்ய முயன்றகாங்கிரஸ் கட்சியோடு அகிலேஷ் கூட்டணி வைத்து அழிவுக்கு இழுத்து சென்றது.
சித்தப்பா மதிக்கவில்லை
மாநிலத்தில் அமைச்சராக இருந்த சிவபால் யாதவை, தனது சொந்த சித்தப்பாவைஅகிலேஷ் நீக்கினார். அவர் கடின உழைப்பாளி, அவரையும் அகிலேஷ்அசிங்கப்படுத்தினார்.
புதிய கட்சி
புதியதொரு கட்சி தொடங்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. புதிய கட்சி தொடங்கப்பட வேண்டும். இறுதிமுடிவுகளை உங்களைக் கேட்டு, ஆலோசித்த பின்பு தான் நான் எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.