
அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது: கொரோனா உலகத்தை ஆட்டிப்படைத்த வேளையில் உலக அரங்கில் இந்தியா பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இது மத்திய அரசின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மனதார பாராட்டுகிறேன். மத்திய, மாநில அரசுகள், தனியார் பங்களிப்பில் தரமான சாலை, போக்குவரத்து துறைகள் வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
குடிநீர் இணைப்பு கங்கை கரையில் 5 கி.மீட்டர் பரப்பில் ரசாயனமில்லா விவசாயம் மேற்கொள்ளும் திட்டத்தை பாராட்டுகிறேன். கேன்தேவா இணைப்பு திட்டத்தில் ரூ.44 ஆயிரத்து 605 கோடியில் 62 லட்சம் பேருக்கு குடிநீர் அளிக்கும் முயற்சி சிறப்பானது. ஜல்சக்தி மிஷன் மூலம் 2 ஆண்டில் 5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கோடியில் மேலும் 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். பிரித்தாளும் கொள்கை விளக்கம் இந்த ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதத்தில் இருந்து அதிகபட்சமாக 9.2 சதவீதமாகவும், அந்நிய செலாவணி 2 மடங்கும் அதிகரித்துள்ளது.
பங்கு சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 57 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்துள்ளது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி மகாகவி பாரதியார் கவிதையை குறிப்பிட்டார். இதன்மூலம் அரசியல் லாபத்துக்காக நம்மை பிரித்தாளும் சக்திகளுக்கு ஒற்றுமையின் மகத்துவத்தை விளக்கிய பிரதமருக்கு மனமார்ந்த நன்றி. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. சுகாதாரம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக திமுகவின் காந்தி செல்வன் இருந்தார்.
அப்போது தான் நீட் தேர்வு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்போது நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு திமுக விளையாடி வருகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.ஆன்மிக உள்ளுணர்வுடன் சுவாமி விவேகானந்தர் உன்னத புதல்வருக்கான இலக்கணங்களை பேசியவர். அந்த உன்னத புதல்வனாக நரேந்திர மோடி உள்ளார். அயராது உழைத்து வருங்கால இந்தியா, சிறந்து தலைமுறைகளை உருவாக்கி வருகிறார். ஆன்மிக உள்ளுணர்வு துணையுடன் 25 ஆண்டு, 100 ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுத்து நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை, நாட்டு மக்கள் மீது தீராப்பற்றுடன் ஒட்டுமொத்த உலகில் புதிய இந்தியாவாக மாற்றும் இலக்கோடு பயணிக்கும் வகையில் இந்த பட்ஜெட் உரை உள்ளது' என கூறினார்.