மோடி அரசை விமர்சித்த காங்கிரஸுக்கு புள்ளிவிவரத்துடன் நாடாளுமன்றத்தில் கரும்புள்ளி குத்திய ராஜீவ் சந்திரசேகர்

By karthikeyan VFirst Published Sep 17, 2020, 5:34 PM IST
Highlights

கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்ட விதத்தையும் பொருளாதார செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு, நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரத்துடன் தக்க பதிலடி கொடுத்தார் ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர்.
 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராஜ்ய சபாவில் பேசிய பாஜக ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த லோக்சபா தலைவருக்கு நன்றி தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.

கொரோனா குறித்து பேசிய ராஜீவ் சந்திரசேகர், யாருமே எதிர்பார்த்திராத வகையில், இதற்கு முன் கண்டிராத அளவிற்கான மாபெரும் பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியது. 1918லிருந்து இதுமாதிரி பெரும் பாதிப்பை நாம் சந்தித்ததில்லை. சீனாவில் தான் கொரோனா உருவானது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் சீனாவில் உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது தான் சந்தேகம். சீனாவின் வூஹான் நகரின் சந்தையில் கொரோனா உருவானதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் வேண்டுமென்றே கொரோனா உருவாக்கப்பட்டதாக ஒரு கருத்தும் அதற்கான ஆதாரங்கள் சிலவும் கொடுக்கப்படுகின்றன.

இப்போது வரை கொரோனாவிற்கு தடுப்பூசி எதுவும் இல்லை. கொரோனாவால் உயிரிழப்புகளும், மக்கள் வருவாய் இழந்து அவர்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. சமூக, பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகளில் உள்ள அறிவுஜீவிகளின் பார்வையையும் சில கருத்துகளையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் உலகமே திணறியது. இதுவரை கொரோனாவிற்கு தடுப்பூசில் இல்லை. எப்போது தடுப்பூசி வரும் என்றுகூட தெரியவில்லை. மக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசு மட்டுமல்லாது, உலகளவில் பல நாடுகளின் அரசுகளும், மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காக்க கடுமையாக போராடிவருகிறது. 

தடுப்பூசி இல்லாத, வேகமாக பரவும் இந்த கொரோனா வைரஸ், இந்தியாவிற்கு மட்டுமல்ல; வளம் நிறைந்த மிகப்பெரிய நாடுகளுக்கே பெரும் சவாலாகவே உள்ளது. இந்திய அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது என்ற எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் பல மாநிலங்களில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்ற எதார்த்தத்தை, கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பக்கட்டமான மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சில மாநிலங்கள் திணறியன என்ற பின்னணியில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த மாநிலங்களிலும் தற்போது சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே சீனாவில் பரவ தொடங்கிவிட்டது. ஆனால் அதை உடனடியாக உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்திற்கு சீனா கொண்டுசெல்லவில்லை. கொரோனாவை நன்றாக பரவவிட்டு, ஒன்றரை மாதம் கழித்து டிசம்பர் 21ம் தேதி தான் உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா தெரியப்படுத்தியது என்பதை ராஜீவ் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா பரவல் வேகம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். அந்தந்த நாட்டு மக்களின் நடத்தைகள், பழக்கவழக்கங்கள், மக்கள் தொகை, சராசரி குடும்ப உறுப்பினர்கள், மக்கள் அடர்த்தி ஆகிய பல கூறுகளின் அடிப்படையில் கொரோனா பரவல் வேகம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். எனவே கொரோனா பரவலில் எந்த நாட்டையும் எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாது. மேற்கண்ட கூறுகளுடன், சமூக, பொருளாதார கூறுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த நேரத்தில் லாக்டவுனின் அவசியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய 2 விஷயங்கள் குறித்தும் விரிவாக பேச விரும்புகிறேன். கொரோனாவை கட்டுப்படுத்த ஆரம்பகால லாக்டவுன் அவசியம். பெரும்பாலான நாடுகள் ஆரம்பக்கட்டத்தில் லாக்டவுனை அமல்படுத்தின. எனவே லாக்டவுன் என்பது அவசியம். லாக்டவுனை அமல்படுத்தி, மத்திய - மாநில அரசுகள் இணைந்து தேசிய அளவில் சுகாதார வசதிகளை மேம்படுத்தியதுடன், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தின.

லாக்டவுனை அமல்படுத்தி, அதை பயன்படுத்தி தீவிரமாக செயல்பட்டதால்தான், பரிசோதனைகளை அதிகரித்து, இறப்பு விகிதத்தை குறைத்து, டிஸ்சார்ஜ் விகிதத்தை அதிகரிக்க முடிந்தது. முழுமையான லாக்டவுன் அமலில் இருந்தபோதும் கூட, அத்தியாவசிய சேவைகள் உட்பட 40-45 சதவிகிதம் பொருளாதார செயல்பாடுகள் நடந்தன.

ஏப்ரல் 2ம் தேதி சோனியா காந்தி பேசிய கூற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது, லாக்டவுன் அவசியமாக இருக்கலாம். ஆனால் அதை சரியாக திட்டமிடவில்லை என்று சோனியா காந்தி கூறியிருந்தார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல தரப்பினருக்கும் சிறந்த ஐடியா, சிறந்த மூளை இருக்கலாம். ஆனால் ஏப்ரல் 2 முதல் இன்று வரை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட எங்குமே, சிறந்த ஐடியா என்று எதையும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. 

எதிர்க்கட்சி நண்பர்களுக்கு ஐநா பாராட்டை நினைவூட்ட விரும்புகிறேன். லாக்டவுனில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தலுக்கு இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளையும் லாக்டவுனை பயன்படுத்திய விதத்தையும் ஐநா பாராட்டியது. இந்திய அரசின் துரித நடவடிக்கைகள், அவசர கால திட்டமிடல், சுகாதாரத்துறையில் அவசரகால வசதிகளை மேம்படுத்தியது மற்றும் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் இந்திய அரசு பாராட்டை பெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இப்பேர்ப்பட்ட பெரும் பாதிப்பை சந்தித்ததில்லை. இந்தியாவின் சுகாதார உட்கட்டமைப்பு, ஆர்&டி தகுதிக்கு கொரோனா பரவல் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் வெறும் 100 நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கி சுகாதார வசதிகளை மேம்படுத்தி, கொரோனாவை திறம்பட எதிர்கொள்கிறது இந்திய அரசு. 

எனவே கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி, டிஸ்சார்ஜ் விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க, லாக்டவுன் அவசியப்பட்டது என்றார். 

கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை இந்திய அரசு கையாண்டது குறித்து பேசிய ராஜீவ் சந்திரசேகர், கொரோனா உலகளவில் கடும் பொருளாதார பாதிப்பையும் சர்வதேச வர்த்தகத்தில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. கொரோனா பரவ ஆரம்பித்த ஆரம்ப கட்டத்திலேயே உலக வர்த்தகத்தில் 65 சதவிகித சரிவு ஏற்பட்டது.

இந்திய பொருளாதாரம், உற்பத்தி, சேவை, ஏற்றுமதி மற்றும் அந்நிய முதலீடு ஆகிய நான்கு துறைகளையும் அதிகமாக சார்ந்துள்ளது. இந்த நான்கும்தான் இந்திய பொருளாதாரத்தின் தூண்கள். கொரோனா காலத்தில் இந்த நான்கு துறைகளுமே கடும் பாதிப்பை சந்தித்தது. கொரோனா ஏற்படுத்திய பொருளாதார தாக்கம் மிகவும் ஆழமானது, தீவிரமானது. வழக்கமான பொருளாதார சிந்தனைகள் மற்றும் ஐடியாக்களை கொண்டு இந்த சூழலை கையாள முடியாது. எனவே இந்திய அரசு, அதற்கான பிரத்யேக திட்டங்களை தீட்டி அவற்றை அமல்படுத்தி இந்த சூழலை எதிர்கொண்டது. 

இந்திய அரசு ஆழமான, விரிவான பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியது. வங்கிக்கடன் பெற்றவர்களின் ஈ.எம்.ஐ செலுத்துவதற்கு சில மாதங்கள் விலக்களித்தது, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டெழ நிதியுதவி செய்தது, 100 நாள் வேலை திட்டத்தின் பயனாளர்களுக்கு நிதியுதவி என கொரோனா காலத்தில் கடும் பாதிப்பை சந்தித்த பிரிவினரான ஏழை மக்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதார மேலாண்மை செய்தது, பின்னர் தொழில்துறைகளை மீட்டுருவாக்கம் செய்து, மீண்டெழுவதற்கான கடன் உதவிகளை செய்து, பொருளாதார மீட்டெடுப்புக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய, வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏப்ரல் - ஜூன் காலண்டில் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியைத்தான் சந்தித்தது. 

இந்த விஷயத்தில், எந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாடும் லாக்டவுனை செயல்படுத்திய விதத்தில் வேறுபட்டது. ஒவ்வொரு நாடுமே வித்தியாசமான முறையில் லாக்டவுனை செயல்படுத்தியது. எனவே எந்த நாட்டின் பொருளாதாரத்துடனும் எந்த நாட்டையும் ஒப்பிட முடியாது. 

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே, அதிகமான அளவிற்கு டாலரை பிரிண்ட் செய்து புழக்கத்தில் விடும் நிலைக்கு வந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பொருளாதார காலாண்டில் பிரிட்டனில் -20 சதவிகிதம், ஜப்பானில் -8 சதவிகிதம், ஜெர்மனியில் -7.7 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இதில் எந்த நாட்டையும் எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாது. ஏனெனில், ஒவ்வொரு நாடும் லாக்டவுனை வெவ்வேறு விதமாக செயல்படுத்தியது. ஆனால் லாக்டவுன் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த உதவியது என்பதே நிதர்சனம். 

லாக்டவுனில் 60 சதவிகித பொருளாதார செயல்பாடுகள் முடங்கின. எனவே பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பது எதார்த்தம். இந்த பொருளாதார வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டதுதான். இதை உணர்ந்துதான் அரசு லாக்டவுனை அமல்படுத்தியது. அந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -23.9 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கு நிதியுதவி செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை பற்றி விமர்சிக்கின்றனர். ஜிஎஸ்டி அமலில் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் பொருளாதாரம் தப்பியிருக்குமா? வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது மத்திய அரசு, மாநிலங்களுக்கு உதவும். கொரோனா தேசிய பேரிடர். எனவே இது நாட்டுக்கான இழப்பு. என்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார். ஜிஎஸ்டி இல்லையென்றால், கொரோனா காலத்தில் மாநிலங்களின் வருவாய் பாதிப்படையாமல் இருந்திருக்குமா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளை நோக்கி எழுப்பினார்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க வழக்கமான உத்திகளோ திட்டங்களோ எடுபடாது. அதனால் தான் மத்திய அரசு அதற்கேற்ப பிரத்யேக திட்டங்களை வகுத்தது. பிரதமர் மோடி சுயசார்பு இந்தியா திட்டத்தை புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான நம்பிக்கையாக பார்க்கிறார். 

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து, நேர்மறையான சிந்தனையுடனும் நம்பிக்கையுடனும் இணைந்து மேம்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனாவிலிருந்து மக்களை காக்க களத்தில் இறங்கி பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கும், சீனாவின் எல்லை விரிவாக்க மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை தகர்த்து, இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காக்க போராடும் ராணுவ வீரர்களுக்கும் எனது சல்யூட்.. ஜெய்ஹிந்த் என்று ராஜீவ் சந்திரசேகர் தனது உரையை முடித்தார்.
 

click me!