வீரம் என்பது இந்தியாவின் பாரம்பரியம். ஆனால் சீனாவின் பாரம்பரியம் துரோகம் மட்டுமே. கொந்தளித்த எதிர்கட்சிகள்.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2020, 5:32 PM IST
Highlights

எல்லை விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் முக்கிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டுமென மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு பரிந்துரைத்துள்ளார். 

எல்லை விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் முக்கிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டுமென மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு பரிந்துரைத்துள்ளார்.  கிழக்கு லடாக்கில் நடக்கும் நிலைமை குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றிய நிலையில், வெங்கைய நாயுடு இந்த ஆலோசனையை வழங்கினார்.

இந்தியா- சீனா இடையே எல்லையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை, எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இந்திய எல்லைப் பகுதியில் பல இடங்களை சீன ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்திய ராணுவத்தை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது,  எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது, எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடாவிட்டால், இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்காது.  எத்தனை வலிமையான, கடுமையான நடவடிக்கையும் இந்தியா எடுக்க தயங்காது என எச்சரித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ராணுவம், நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நிற்கிறது,  எல்லை நிலவரம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் முக்கிய தலைவர்களின் கூட்டத்தை நடத்த வேண்டும்.  அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எல்லை நிலவரம் குறித்த தகவல்களை வழங்கலாம். 

இந்தியாவில் எல்லை விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக சர்வதேச அளவில் ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது, எனவே அவற்றை முறியடிக்க ஒட்டுமொத்த நாடும், பாராளுமன்றமும், ராணுவத்துடன் ஒன்று பட்டுள்ளன என்று நாம் காட்ட வேண்டும். இந்தியா, ஒற்றுமையாக இருக்கிறது என்ற செய்தியை நாம் வழங்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் "சர்வே ஜனா சுகினோ பவந்து" என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் வரலாற்றில் இதுவரை நாம் எந்த நாட்டையும் நாம் ஆக்கிரமிக்கவும் இல்லை, தாக்கவுமில்லை என அவர் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்,  நாம் அனைவரும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பிரச்சினையில் ஒன்றுபட்டு இருக்கிறோம். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முழுமையாக அரசாங்கத்துடன் நிற்கிறது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நாடு எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. சீன படைகள் இருந்த இடத்திற்கே திரும்ப செல்ல வேண்டும். இந்தியா ஒற்றுமையுடன்தான் இருக்கிறது என்பதை நாம் காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

அதே நேரத்தில்,  இந்திய ராணுவத்தை எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம் என காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இதே உணர்வு நாடு முழுமைக்கும் எதிரொலிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.  எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரிப்பதற்கு முன்  நிலமை மீட்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது குறித்து பேசிய ஆர்சிபி சிங், சீனா நன்றி அற்ற நாடாக இருந்து வருகிறது. ஐநா பாதுகாப்பு குழுவில் நிரந்தர அங்கத்துவத்தை பெற அந்நாட்டிற்கு இந்தியா உதவியது. இந்தியா பஞ்சசீல கொள்கையை வலியுறுத்தியது, ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் ஆக்கிரமிப்பை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் நாம் மிகவும் உறுதியாக பேச வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ரவிபிரகாஷ் வர்மா கூறுகையில், நாட்டின் மின்னணு ஊடகங்கள் எல்லையின் ஒரு போர் சூழ்நிலையை உருவாக்க முனைகின்றன என கூறியுள்ளார். 

அதேபோல் கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த 20 வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் அந்தோனி அஞ்சலி செலுத்தியதோடு இறையாண்மையை பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று அரசாங்கம் உறுதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சிவசேனாவின் சஞ்சய் ரவுத், நமது ஜவான்களுடன் நாங்கள் நிற்கிறோம், வீரம் என்பது இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் சீனாவின் பாரம்பரியம் துரோகம் மட்டுமே. இந்த விவகாரத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சிவசேனா அரசாங்கத்துடனும், ராணுவத்துடனும் முழுமையாக நிறுத்தியது எனக் கூறினார். இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் எல்லை விவகாரத்தில் அரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 

 

click me!