எம்.பி தேர்தல் தொகுதி ஒதுக்கீடு! பிடி கொடுக்காத ஸ்டாலின்! குழப்பத்தில் திருமாவளவன்!

By vinoth kumarFirst Published Oct 5, 2018, 2:45 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பேச்சின் போது ஸ்டாலின் பிடி கொடுக்காமல் இருந்தது விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பேச்சின் போது ஸ்டாலின் பிடி கொடுக்காமல் இருந்தது விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 28 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தான் தி.மு.கவின் நிலைப்பாடாக உள்ளது. முடியாத பட்சத்தில் மேலும் இரண்டு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து 26 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களை களம் காண வைக்க வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் வியூகம். 

அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் தான் கணிசமான எண்ணிக்கையில் வென்று நாடாளுமன்றத்திற்கு தி.மு.க எம்.பிக்களை அனுப்ப முடியும் என்று ஸ்டாலின் கருதுகிறார். இதனால் கடந்த 2004 மற்றும் 2009 எம்.பி தேர்தல்களை போல் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுக்கும் முடியாது என்று ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கே அதிகபட்சமாக ஆறு முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே வழங்க தி.மு.க திட்டமிட்டுள்ளது. இதே போல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு தொகுதி என்பது தான் ஸ்டாலினின் இறுதி முடிவு என்கிறார்கள். 

இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் நடத்தும் மாநில மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினை சந்தித்து நேற்று திருமாவளவன் அழைப்பிதழ் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அரசியல் பக்கம் பேச்சு திரும்பிய போது விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட விரும்புவதாக திருமாவளவன் வெளிப்படையாகவே கூறியதாக சொல்லப்படுகிறது. அது தவிர மேலும் இரண்டு தொகுதிகளின் பெயரையும் திருமாவளவன் கூறியதாகவும், ஆனால் அதற்கு ஸ்டாலின் பிடி கொடுக்காமல் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இரண்டு தொகுதிகள் கூட ஒதுக்கப்படவில்லை என்றால் எப்படி தி.மு.க கூட்டணியில் தொடர முடியும் என்ற திருமாவளவன் உடன் இருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்கிற குழப்பத்திற்கு திருமாவளவன் ஆளாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

click me!