வாகன ஓட்டிகளே எச்சரிக்கை.. உங்கள் வாகனங்களில் இதை பயன்படுத்தினால் ஆப்பு..?? நாளை மறுதினம் தீர்ப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2022, 1:47 PM IST
Highlights

அதற்காகத்தான் கான்ஸ்டபிள் கண்டறிந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாக தெரிவித்த நீதிபதி, தகுந்த உயர் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தால் உடனடியாக வழக்குப்பதியப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் நாட்டில் உள்ள அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் எதிர்பார்ப்பதாகவும், கிரிமினல்களும் இதுபோன்ற சின்னங்களை பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான வழக்கில் நாளை மறுதினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வாகனங்களிலும், நம்பர் ப்ளேட்களிலும் தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது என்பதால் உரிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தவறான வண்ணங்களிலான விளக்குகளை பயனடுத்தியதாக 4456 வழக்குகள், கருப்பு ஸ்டிக்கர்கள் தொடர்பாக 4697 வழக்குகள், தவறான நம்பர் பிளேட் தொடர்பாக 155331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு தேசிய மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் இல்லை என நீதிபதி சுட்டிக்காட்டி, குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், வழக்குபதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென அறிவுறுத்தினார். முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள், ஆகியோரால் தவறாக பயன்படுத்தப்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளார்.

காவல்துறை தரப்பில் காவலர்களிடமிருந்து இதுபோன்ற புகார்கள் வரவில்லை என்றும், அப்படி வராதபோது உயர் அதிகாரி தாமாக முன்வந்து வழக்குப்பதிய முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, அரசு வழக்கறிஞர் வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் மத்திய அரசின் முத்திரயை பயன்படுத்துகின்றனர் என்றும், இதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதற்காகத்தான் கான்ஸ்டபிள் கண்டறிந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாக தெரிவித்த நீதிபதி, தகுந்த உயர் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தால் உடனடியாக வழக்குப்பதியப்பட வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் நாட்டில் உள்ள அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் எதிர்பார்ப்பதாகவும், கிரிமினல்களும் இதுபோன்ற சின்னங்களை பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். அரசு, நீதித்துறை, காவல்துறை, வங்கி, காப்பீடு ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்களின். தனியார் வாகனங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் நாளை மறுதினம் உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை தள்ளிவைத்துள்ளார்.
 

click me!