வாகன ஓட்டிகளே உஷார்... நாளை முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல்.. களத்தில் போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2021, 2:12 PM IST
Highlights

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயம், ஆனால் இது தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. 

வரும் 13ம் தேதி (நாளை) முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசாருக்கு ஈரோடு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களில் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாததுதான் என காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அதை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் வேதனையான ஒன்று. இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல்  செப்டம்பர் 7 தேதி வரை வாகன விபத்துக்கள் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது. அதில் சென்னை மாநகரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 325 பேர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளனர். சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட விபத்தில் மட்டும் 659 பேர் உயிர்  இழந்துள்ளனர். குறிப்பாக 1056 பேர் ஹெல்மெட் அணியாததால் காயமடைந்துள்ளனர். அதில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதே போல ஹெல்மெட் அணிவதை வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு கைப்பற்றுகின்றனர் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 72% பேர் மட்டுமே ஹெல்மெட் அணிவது தெரியவந்துள்ளது. ஆனால் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்கும் வகையிலான பல்வேறு விழிப்புணர்வுகள் தொடர்ந்து காவல் துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 240 வழக்குகள் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதே பிற மாவட்டங்களில் இதில் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருந்துவருகிறது, இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், அப்படி மீறினால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அம்மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், 

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயம், ஆனால் இது தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பலர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு, அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 80 சதவீதத்திற்கு மேல் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை நாளை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களின் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், அப்படி அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 
 

click me!