அட்ரா சக்கை..ஜெயலலிதா வீட்டு வேலைக்காரம்மாவுக்கும் மரியாதை... அடிமட்டத்திற்கு இறங்கி வந்த ஓ.பி.எஸ்- எடப்பாடி.!

By Thiraviaraj RMFirst Published Oct 12, 2021, 1:35 PM IST
Highlights

பொன்விழா நிகழ்ச்சியின்போது வழக்கம் போல் கொடியேற்றி இனிப்பு வழங்குவது, எம்.ஜி.ஆரின் புகழ் பாடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அ.தி.மு.க.,வின் பொன் விழாவை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகளான பொன்னையன், ஜே.சி.டி. பிரபாகரன், தமிழ்மகன் உசேன் ஆகியோரும் பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

கூட்டத்தில் பொன் விழாவையொட்டி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய 1972-ம் ஆண்டு முதல் இதுவரை கட்சி மாறாத அ.தி.மு.க. நிர்வாகிகளை கண்டறிந்து அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உடனடியாக மாவட்ட செயலாளர்கள் மாவட்டந்தோறும் அப்படிப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை சேகரித்து உடனே தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

ஜெயலலிதாவின் வீட்டில் பணியாற்றிய ராஜம்மாள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கும், பொன் விழாவையொட்டி கவுரவிக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் சாதனைகளை அவருடனான அனுபவங்களை கட்சியில் பல பேர் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அந்த புத்தகங்களை சேகரித்து தலைமை கழகத்தில் கொடுத்தால் புத்தகம் எழுதிய நிர்வாகிகளையும் பாராட்ட ஏற்பாடு செய்யப்படும். பொன்விழா நிகழ்ச்சியின்போது வழக்கம் போல் கொடியேற்றி இனிப்பு வழங்குவது, எம்.ஜி.ஆரின் புகழ் பாடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், செய்தித்தொடர்பாளர்கள், அணிகளின் செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதில் சென்னையை பொருத்தவரை அமைப்பு செயலாளர்கள் என்ற முறையில் டி.ஜெயக்குமார், ஆதி ராஜாராம் பங்கேற்றிருந்தனர்.
 

click me!