
கொசு உற்பத்தி மிகவும் வீரியமானது என்றும் டெங்கு கொசுவை ஒழிக்க இன்னும் அதிக வேகமாக செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட டெங்கு ஒழிப்பு ஆய்வுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். டெங்கு பாதிப்பை சுகாதார துறையின் பிரச்சனையாக கருதாமல் முதலமைச்சர் அனைத்து துறை பிரச்சனையாக கருதி ஒன்றிணைத்து செயல்படுத்தி வருகிறார் என்றும் அவர் கூறினார்.
கொசு உற்பத்தி மிகவும் வீரியமானது என்றும், அதன் முட்டைகளின் பெருக்கமும் அதிகம், கொசுவோடு போட்டிப்போடுவது மிகப்பெரும் சவால்தான் என்றார்.
ஆனாலும், அதிகாரிகள் நினைத்தால், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி டெங்குவை தவிர்க்கலாம் என்றும் கூறினார். எனவே, நாம் கொசுவைவிட வேகமாக செயல்பட வேண்டும் என்றார். டெங்கு கொசுவை ஒழிக்க இன்னும் அதிக வேகமாக செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.