அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி.. ஓ.எஸ்.மணியனின் உதவியாளர், பரிதி இளம்வழுதியின் மனைவி கைது..!

By vinoth kumarFirst Published Nov 6, 2021, 10:05 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத் (36) மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமை செயலக ஊழியர் கண்ணன் என்பவரும் அடங்குவர்.

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர், மறைந்த அதிமுக நிர்வாகி பரிதி இளம்வழுதியின் 3வது மனைவி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதியப்பட்டு, 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்கள் அரசு வேலை, வங்கி வேலை, ரயில்வே வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுள்ளனர்.

இதில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரி, தனது பெரியப்பா மகன்கள் 2 பேர் டிஎன்பிஎஸ்சி  எனப்படும் தமிழ்நாடு தேர்வாணையத்தில் பெரிய அதிகாரிகளாக பணிபுரிவதாகவும், பணம் கொடுத்தால் மருந்து ஆய்வாளர் பதவி வேலை வாங்கித் தருவதாகவும் பாலதண்டாயுதத்திடம், சேஷாத்ரி கூறியுள்ளார். மருந்து ஆய்வாளர் பணிக்கு 12 லட்சம் ஆகும் எனக்கூறிய சேஷாத்ரி, முன்பணமாக 6 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், வேலை கிடைத்த பின்னர் மீதி பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

இதற்கு பாலதண்டாயுதம் ஒத்துக் கொள்ளாததால், 6 லட்சத்திற்கு முறையாக கையெழுத்திட்டு பூர்த்தி செய்யப்பட்ட காசோலையை வைத்துக் கொள்ளுமாறு கூறி சேஷாத்ரி கொடுத்துள்ளார். அதை நம்பி, பாலதண்டாயுதம் தனது மாமியார் ஜெயலட்சுமி வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சம் எடுத்து, தனது கையிருப்பில் இருந்த 2 லட்சம் சேர்த்து மொத்தம் 6 லட்சத்தை தனது வீட்டில் வைத்து 10.05.2019 அன்று சேஷாத்ரியிடம் ரொக்கமாக கொடுத்துள்ளார்.

சேஷாத்ரி வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தராததோடு, பலமுறை நேரிலும், தொலைபேசி மூலமாகவும் பாலதண்டாயுதம் கேட்டும் முன்பணமாக வாங்கிய 6 லட்சத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஓ.எஸ்.மணியனின் உதவியாளரான சேஷாத்திரி மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். இதுபோல மேலும் பலரிடம் ஏமாற்றியது தெரியவந்தது. 

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத் (36) மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமை செயலக ஊழியர் கண்ணன் என்பவரும் அடங்குவர். இந்த 30 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இவர்கள் மீது இன்னும் பல புகார்கள் உள்ளன.

மேலும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக் கூடாது. இதுபோன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றி தகவலை தெரிந்து கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 044-28447701, 28447703 மற்றும் வாட்ஸ் அப் நம்பர் 94981 05411, மாநில காவல் கட்டுப்பாட்டு அறை  எண் 044-23452359, சென்னை காவல் பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவு எண் 044-23452380 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!