
இந்திய ஏற்கமாட்டோம் என்று சொல்பவர்கள் இந்தி படங்களை இயக்கத் துடிக்கிறார்கள், இந்தி பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்தி நடிகைகளை தமிழில் நடிக்க வைக்கிறார்கள் என மோகன்ஜி இயக்குனர் பா .ரஞ்சித்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்தி மொழியை ஏற்க முடியாது என்றும் இந்தியாவில் திராவிடர் களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று கருதுகிறேன், திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது அவசியம் என பா. ரஞ்சித் தெரிவித்துள்ள நிலையில் மோகன் ஜி இவ்வாறு விமர்சித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அமித்ஷா பேசிய வார்த்தை இன்னும் பற்றி எரிகிறது குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. தற்போது இது திரைத்துறையினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் இடையே இது கருத்து மோதலாக வெடித்துள்ளது. ஹிந்தி தான் தேசிய மொழி என அஜய் தேவ்கன் கூற, கிச்சா சுதீப் அப்பிட எல்லாம் இல்லை என மறுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொரு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தியை விடுங்க சமஸ்கிருதம் தான் நாட்டிலேயே பழமையான மொழி, ஏன் சமஸ்கிருதத்தை இணைப்பு மொழியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என பேசியுள்ளார்.
இப்படி இந்தி சர்ச்சை நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதே நேரத்தில் பாஜகவுக்கு எதிராக பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்வைத்து அவர் இந்த ஆபரேஷனில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள பா. ரஞ்சித், தென்னிந்தியாவை விட வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தென்னிந்தியாவை விட வட இந்தியா உயர்ந்தது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. அதேபோல் இந்தி மொழி பல மாநிலங்கள் பேசக்கூடிய ஒரு மொழியாக இருப்பதால், அது மேன்மையானது என்று யோசிக்கின்றனர். ஆனால் அதை நாம் ஏற்றுக் கொள்ள தேவையில்லை. நாம் அதை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்க போவதில்லை, தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன், திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் பா.ரஞ்சித் இந்த கருத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் திரவுபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன்ஜி டுவிட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் இந்தியை ஏற்கமாட்டோம், ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள் நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், ஹிந்தி பேச பிடிக்காது, ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழிபெயர்த்து லாபமடைவார்கள், தமிழின் பெயரைச் சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். இந்தி பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை, அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும் ஆதரவு தரலாம் என அவர் கூறியுள்ளார்.