
டாக்டர் அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியது பொறுப்பற்றது, நியாயமற்றது, நேர்மையற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதி உள்ள நிலையில் பாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.
மோடிக்கு, பாஜகவுக்கு எதிரான அலை தமிழகத்தில் நிலவி வருகிறது. பாஜகவும் மோடியும் மதத்தால் மக்களை பிரிக்கின்றனர் என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் இசையமைப்பாளர் இளையராஜா அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியுள்ளார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்றும், அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றும் இளையராஜா அந்த முன்னுரையில் கூறியுள்ளார். இதை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டது நியாயமற்றது நேர்மையற்றது என விமர்சித்துள்ளார்.
இந்தி மொழி திணிப்பை கைவிடவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கே. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது, நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது, அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன். ஒரே நாடு ஒரே தேசம் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பு இந்தியா முழுவதும் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் அமிர்ஷா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் இந்தி அலுவல் மொழியாக இருக்க வேண்டும் எனவும், இந்தி மொழியில் அனைவரும் பேச வேண்டுமெனவும் அமித்ஷா முயற்சித்து வருகிறார்.
8 மாநில பள்ளிகளில் கட்டாயம் இந்தி இருக்க வேண்டும் என்றும், அதற்கு 12,000 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இந்தியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டவர்கள் 26 சதவீதம் மட்டுமே, 74% மற்ற மொழியைப் தாய் மொழியாக பேசுகின்ற மக்கள் ஆவர். மற்ற மொழிகளில் இந்தி கலந்து பேசுவதால் 43% இந்தி பேசுகிறார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற இந்தித் திணிப்பு முயற்சிகளை கண்டித்து போராட்டம் நடைபெறும். படிப்படியாக பல்வேறு துறைகளில் நுழைவு தேர்வுகள் புகுத்தப்படுகிறது. இதுபோன்ற தேர்வுகள் அதிகம் தனியார் கோச்சிங் சென்டர்களை உருவாக்கவே வாய்ப்பாக அமையும்.
இதனால் அடித்தட்டு மற்றும் பட்டியல் இன மக்கள் கல்வி மற்றும் கல்லூரி வாசலை மிதிப்பது கடினமாகி விடும். இளையராஜாவுடன் இசையில் போட்டி போடுவதற்கு யாரும் இல்லை அது மகிழ்ச்சிதான். ஆனால் அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது பொறுப்பற்றது, நியாயமற்றது. நேர்மையற்றது அவர் அரசியல் நோக்கத்தோடு தான் பேசுவதாக நான் நினைக்கிறேன். இவ்வாறு பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.