
படை பரிவாரங்களுடன் பகுமானமாக டெல்லிக்கு சென்ற தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நறுக்கென ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறாராம் மோடி! விளைவு, கலங்கிக் கிடக்கிறது தமிழக அரசு.
நிதிக்குழு ஆலோசனைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் சமீபத்தில் டெல்லிக்கு சென்றார் பன்னீர்செல்வம். அப்போது தமிழக அரசின் நிதி நிலை பற்றி வெகுவாக ஆராயப்பட்டிருக்கிறது. ஏற்கனவே டெல்லி இது பற்றிய ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட் ஒன்றினை தயார் செய்து வைத்திருந்திருக்கிறது. இவர்கள் ஆலோசனைக்கு உட்கார்ந்ததும், அதை தூக்கி மேஜையில் வைத்து ’ஏன் இவ்வளவு மோசமாக நிதி நிலையை வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
உடனே பன்னீர் அண்ட்கோ ‘எங்கள் மாநிலத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய கடந்த ஆண்டு நிதியில் இன்னும் நிலுவை இருக்கிறது.’ என்று சொன்ன அடுத்த நொடியில், ‘உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியாதா? அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இன்னும் நிதியை குறைக்கும் யோசனை எங்களிடம் இருக்கிறது.’ என்று கெத்தாக ஒரு பதில் குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
இதில் தமிழக டீம் அதிர்ந்து நின்று பின் சுதாரித்து, நிதி பற்றாக்குறையால் தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்ற அத்தியாவசிய திட்டங்களின் பட்டியலை எடுத்துக் காட்டி, ‘ஏற்கனவே நிலை இப்படி இருக்கையில் நீங்கள் இன்னும் கையை சுருக்கினால் எப்படி? தமிழக மக்களின் நிலை என்னவாகும்?’ என்று சில எம்.பி.க்கள் கண்ணை கசக்கியிருக்கிறார்கள்.
உடனே மத்திய நிதித்துறை அதிகாரிகள் சிலர் சிரித்தேவிட்டார்களாம், இதில் பன்னீர்செல்வம் டென்ஷனாகியிருக்கிறார். உடனே மிக கூலாக டெல்லி அதிகாரிகள், “சாலைக்கும், கல்விக்கும், குடிநீருக்கும் கொட்ட வேண்டிய பணத்தை இலவச திட்டங்களுக்கு மாற்றிவிட்டது யாருடைய தப்பு? ஏன் இலவசங்களை கொடுக்கிறீர்கள்?
மக்களுக்கு சோறு முக்கியமா, ஸ்கூட்டி முக்கியமா? எல்லா மாநில அரசுகளும் இலவசங்களை கொடுத்துதான் தன் மக்களை ஆள்கிறதா! நீங்கள் மட்டும் ஏன் தேவையில்லாத திட்டங்களில் பணத்தை கொட்டுகிறீர்கள்? பிறகு தேவையான விஷயத்துக்கு பணமில்லை என்று மத்திய அரசை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? வீண் விஷயங்களுக்கு நிதி ஒதுக்க ‘சார்’ தயாராக இல்லை.
இலவச திட்ட அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்தது ஜெயலலிதாதான். ஆனால் இப்போது அவர் இல்லை, அவர் இருந்திருந்தால் எந்த சிக்கலையும் சமாளித்து மேலேறுவார், நம்மிடம் எதிர்பார்க்க மாட்டார் என்று ஹைகமிட்டி கூட்டத்திலேயே ‘சார்’ சொன்னார்.
இப்போது உங்கள் அரசை ஆள்வது ஜெயலலிதா இல்லை. எனவே இலவசங்களை உடனடியாக நிறுத்துங்கள். உங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய மத்திய அரசின் திட்டங்களுக்கே மத்திய நிதியை செலவழியுங்கள். அப்படி செய்தால் மட்டுமே வளர்ச்சி திட்டங்களுக்கு இனி வரும் ஆண்டுகளில் உங்களுக்கு நிதி ஒதுக்குவது பற்றி யோசிக்க முடியும் என்று ‘சார்’ சொல்லிவிட்டார்.” என்று கட் அண்டு ரைட்டாக பேசியிருக்கிறார்கள்.
ஆலோசனை முடிந்த பின், அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் டெல்லி அதிகாரிகளிடம் ‘சார் சொல்லிட்டார், சார் சொல்லிட்டார்னு சொன்னீங்களே, அவரு?...’ என்று கேட்க, ‘பிரைம் மினிஸ்டர் தான்’ என்று பொளேர் பதில் வந்திருக்கிறது.கப் சிப்பென சென்னைக்கு பிளைட் ஏறிவிட்டது பன்னீர் டீம்.
இலவச திட்டங்களை பெரிதாக நம்பித்தான் தில்லாக தேர்தல்களை சந்திக்கிறது அ.தி.மு.க. அரசு. இப்போது அதை நிறுத்தச் சொல்லி உத்தரவு வந்துவிட்டதால் கைபிசைகிறது கவர்மெண்ட். மோடியின் உத்தரவை மீறி செயல்பட்டு, நாளைக்கு எந்த நிதியும் டெல்லியிலிருந்து வராவிட்டால் அரசை அன்றாடம் ஓட்ட எங்கே போய் கை ஏந்துவது? என்கிற பயமும் அவர்களை போட்டு ஆட்டுகிறது.