உ.பி.க்கு தீங்கு இழைக்க கனவு காணும் குரு-சிஷ்யர்’கள் பிரதமர் மோடி, அமித்ஷா மீது மாயாவதி கடும் தாக்கு

First Published Feb 25, 2017, 9:11 PM IST
Highlights


.பி.க்கு தீங்கு இழைக்க கனவு காணும் குரு-சிஷ்யர்கள்
பிரதமர் மோடி, அமித்ஷா மீது மாயாவதி கடும் தாக்கு
 

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் உத்தரப்பிரதேச மக்களுக்கு தீங்கு இழைக்க கனவு காணும் குரு-சிஷ்யர்கள் என, மாயாவதி தாக்குதல் தொடுத்தார்.

பிரசாரம்

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா, சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தக்கட்சிகளின் தலைவர்கள், ஒருவருக்கொருவர் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருகிறார்கள். தியோரியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசினார்.

குரு-சிஷ்யர்

அப்போது அவர் பிரதமர் மோடியை குரு என்றும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சிஷ்யர் என்றும் வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது-

‘‘உத்தரப் பிரதேசத்துக்கு தீங்கு இழைக்க வேண்டும் என குருவும் சிஷ்யரும் கனவு கண்டு வருகிறார்கள். காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளை ‘கசாப்’ (தீவிரவாதி) என அமித்ஷா கூறுகிறார்.

‘கசாப்’ அமித்ஷா

பா.ஜனதா தலைவரை (அமித்ஷா) விட பெரிய தீவிரவாதிகள் யாரும் இருக்க முடியாது...அதற்கு உதாரணமாக குஜராத் திகழ்கிறது. அந்த ‘கசாப்’ இங்கு ஆட்சிக்கு வரக்கூடாது.

பகுஜன்சமாஜ் கட்சியின் தலித் ஓட்டுகள் பா.ஜனதாவை வீழ்த்த தயாராக உள்ளன. முஸ்லிம் மக்களும் ஒட்டு மொத்தமாக பகுஜன்சமாஜ் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

முஸ்லிம் ஓட்டுகள் பகுஜன்சமாஜ் கட்சிக்கு விழுந்தால், அது பா.ஜனதாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். சிறுபான்மையோர், குறிப்பாக முஸ்லிம்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டு வருகிறார்கள்.

முஸ்லிம்கள் சமாஜ்வாதிக்கு ஓட்டளித்தால் அது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு உதவி செய்ததாகி விடும். ஆர்.எஸ்.எஸ். கொள்கையை பின்பற்றி இட ஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்துவிடும். அல்லது அதை பயனற்றதாக்கிவிடும்.

பாலும் நெய்யும்...

பா.ஜனதா தலைவர்கள் தற்போது ‘‘பாலும் நெய்யும் ஆறாக ஓடும்’’ என வாக்குறுதி அளித்து வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் அள்ளி வீசியதைப்போல் எந்த வாக்குறுதிகளை வேண்டுமானாலும் அவர்கள் வழங்கலாம். ஆனால், மக்கள் அதற்கு இரையாக மாட்டார்கள்’’.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

 

 

 

 

 

click me!