
மற்றவர்கள் அணியும் உடையை ‘காப்பி’ அடிக்கும் மோடி
அகிலேஷ் யாதவ் பதிலடி
மற்றவர்கள் அணியும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர ஆடைகளை ‘காப்பி’ அடித்து அணிவதாக, பிரதமர் மோடிக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
காப்பி அடிக்கும் மாணவர்கள்
உ.பி.யில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அந்த மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் ‘காப்பி’ அடிப்பதற்கான மையங்கள் ஏலம் விடப்படுவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்து, சித்தார்த் நகர், சாந்த் காப்பரி நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் உ.பி. முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ் பேசினார். அவர் கூறியதாவது-
பெயர் பொறித்த உடை
‘‘பிரதமர் அவர்களே, தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது பற்றி கூறினீர்கள். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மற்றவர்கள் அணியும் உடைகளை ‘காப்பி’ அடிப்பது யார்? என உங்களைக் கேட்க விரும்புகிறேன்.
மிகப் பெரிய மனிதர் ஒருவர், தனது பெயர் பொறித்த விலை உயர்ந்த உடை (சூட்) அணிந்து இருந்தார்...பா.ஜனதா கட்சியினரை நான் கேட்க விரும்புகிறேன், அதே போன்ற உடையை அணிந்தது யார்...? எனவே, நீங்களும் ‘காப்பி’ அடிக்கிறீர்கள் என நான் சொல்கிறேன்.
அமெரிக்க அதிபர் இந்தியா வந்தபோது, அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட உடையை அணிந்து இருந்ததைப் பார்த்தோம்.
அப்போதுதான் நமது பிரதமர் யாருடைய உடையை ‘காப்பி’ அடித்து இருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த 2015-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் மோடி விலை உயர்ந்த சூட் அணிந்து இருந்தது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த உடை ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிக்கை
சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையும் பா.ஜனதாவால் ‘காப்பி’ அடிக்கப்பட்டது. பிரதமர் அவர்களே நீங்களும் பல விஷயங்களை ‘காப்பி’ அடித்து இருக்கிறீர்கள்’’.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
தேர்வில் ‘காப்பி’யடிப்பது குறித்து அகிலேஷ் பேசியபோது, (கூட்டத்தினரைப் பார்த்து) ‘‘நீங்கள் மாணவர் பருவத்தில் இருந்தபோது யார், யாரெல்லாம் சிறிதளவாவது தேர்வில் ‘காப்பி’ அடிக்கவில்லையோ, அவர்கள் கைகளை தூக்குங்கள்’’ என்றார்.
அப்போது யாரும் கை தூக்காததால், ‘‘நீங்கள் அனைவருமே ‘காப்பி’ அடித்துதான் பாஸ் செய்தது போல் தெரிவதாக’’ அகிலேஷ் ‘ஜோக்’ அடித்தார்.