
மத்திய அரசின் சாதனைகளை வெளியிட தயாரா?...பிரதமர் மோடிக்கு அகிலேஷ் யாதவ் சவால்
மத்தியில் கடந்த 3 ஆண்டு கால பா.ஜனதா அரசின் சாதனைகளை வெளியிடத் தயாரா? என, பிரதமர் மோடிக்கு உ.பி. முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்தார்.
உ.பி. மாநிலம் பதோகியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது-
சாதனைகள்
‘‘உ.பி.யில் எங்கள் அரசு செய்த 10 சாதனைப் பணிகளை நான் கூறி இருக்கிறேன். எங்கள் அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடு குறித்த அறிக்கையை தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
அதே நேரத்தில், மத்தியில் 3 ஆண்டு கால பா.ஜனதா அரசின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை வெளியிட பிரதமர் மோடி தயாரா?.
ஓட்டுக்குப் பணம்
இங்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக கேள்விப்படுகிறேன். யார் கொடுத்தாலும் பணத்தை வாங்கிக் கொண்டு உங்கள் வாக்குகளை சைக்கிள் சின்னத்துக்கு அளியுங்கள்.
பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, அவர் உயிரோடு இருக்கும்போதே அவருக்காக நினைவுச்சின்னம் அமைத்தவர். ஆனால், தற்போது அவருடைய பேச்சில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிகிறது.
‘மாயாவதி ஆன்டி’
இருப்பினும் அவர் தனது உரையை வாசித்துக்கொண்டு இருக்கும்போதே மக்களுக்கு தூக்கம் வரத் தொடங்கி விடுகிறது. அவர் எனது ‘ஆன்டி’தான்.
ஆனால், அவர் எந்த நேரத்திலும் பா.ஜனதாவுடன் உடன்பாடு வைத்துக்கொள்ளலாம் என்பதால் மிகவும் கவனமாக இருங்கள். மீண்டும் சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால், ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 பென்சனாக வழங்கப்படும்’’.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
கணிசமான தொகுதிகள்
கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு கணிசமான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது குறித்து தனது பேச்சின்போது விளக்கம் அளித்த அகிலேஷ் ‘‘கஞ்சனாக இருந்து கொண்டு நட்புறவை தொடர முடியாது’’ என்றார்.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் சமாஜ்வாதி 298 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதம் உள்ள 105 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.