வாரணாசியில் சர்வதேச மாநாட்டு மையத்தை திறந்து வைக்கிறார் மோடி. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2021, 2:56 PM IST
Highlights

மொத்தம் 744 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் சுமார் 839 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்கள் மற்றும் பொது பணிகளுக்கான திட்டங்களுக்கு  பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 15 ஆம் தேதி (நாளை) உத்தரபிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியை பார்வையிட வருகைதர உள்ளார். அப்போது வாரணாசியில் உள்ள சிக்ராவில் உள்ள ருத்ராக் என்ற சர்வதேச மாநாட்டு மையத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் அங்கு அவர் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

கலாச்சார பழமை மிகுந்த நகரமான வாரணாசியின் புதிய அடையாளங்களில் ஒன்றாக ஜப்பான் நாட்டின் உதவியுடன் ருத்ராக் என்ற வாரணாசி சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு புதிய மையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். பண்டைய நகரமான காசியின் பெருமையே பரைசாற்றும் வகையில் மாநாட்டு மையத்திற்கு ருத்ராக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 108 ருத்ராட்சங்கள் இடம்பெறும் வகையில் மாநாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது என்றும், அதன் கூரையின் அமைப்பு சிவலிங்கத்தைப் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கட்டிடத்தின் கூரை எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது இரவு நேரங்களில் மிக அழகாக ஒளிரக் கூடியதாகும். வாரணாசியின் ஆடம்பரமான சிக்ரா பகுதியில் அமைந்துள்ள 2.87 ஹெக்டர் நிலப் பரப்பளவில் இரண்டு மாடி கொண்டதாக மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் எந்நேரமும் சுமார் 1200 பேர் வரை அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச மாநாடுகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் மாநாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் மையத்தின் கேலரி வாரணாசியின் கலை கலாச்சாரம் மற்றும் இசையை சித்தரிக்கும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் உதவியுடன் கட்டப்பட்ட வாரணாசி சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம், ஒரு பிரதான மண்டபம், முழு பறக்கும் கோபுரம், கேலரி, சந்திப்பு அறைகள் மற்றும் 1200 கார்களுக்கான பார்க்கிங் வசதிகளைக் கொண்டுள்ளது.  தேவைப்பட்டால் பிரதான மண்டபத்தை சிறிய சிறிய அறைகளாக பிரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடமாகவும் அமைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த வாழ்விடம் மதிப்பீட்டிற்கான பசுமை மதிப்பீட்டு நிலை 3க்கு தகுதியானது எனது சான்று பெற்றுள்ளது.

இந்த மாநாட்டு கட்டிடம் போதுமான பாதுகாப்பு  அமைப்புகளை கொண்டுள்ளன. இதற்குப் பிரதான மூன்று நுழைவாயில்கள் உள்ளன, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் ஒரு நுழைவாயிலும், சேவைக்கான மற்றொரு நுழைவாயிலும், மற்றும் தனி விஐபிகள் வந்து செல்வதற்கான நுழைவாயில் என மூன்று நுழைவாயில்கள் அமைந்துள்ளன. மக்களிடையே சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான நோக்கமாகவே இந்த வாரணாசி சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாத்துறையை வலுவாக்கவும் அதன்மூலம் நகரத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் நிருவப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நாளை இதைத் திறந்து வைக்க உள்ளார். அதே நேரத்தில் இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தின் (பிஹெச்யு) பிராந்திய கண் மருத்துவமனை, மற்றும் கங்கை நதியில் ரோரோ படகு சேவை, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, கௌடல்யா நகரில் பன்னாட்டு வாகன நிறுத்தம், மூன்று வழி சாலை திட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை அவர் திறந்து வைக்க உள்ளார். மொத்தம் 744 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் சுமார் 839 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்கள் மற்றும் பொது பணிகளுக்கான திட்டங்களுக்கு  பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி பின்னர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆய்வு செய்து பின்னர் அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது அங்கு பாஜக ஆட்சி நடந்து வருவதால்,தேர்தல் நடவடிக்கைகளில் வேகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மோடியின் இந்த உத்தரபிரதேச பயணம் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

 

click me!