
திமுக தலைவர் கருணாநிதியை, மனிதாபிமான அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர், பிரதமர் மோடி கருணாநிதியின் இல்லத்தில் இருந்து கிளம்பினார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியை மூத்த தலைவர் என்ற முறையில் மோடி சந்தித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பிரதமர் மோடி கருணாநிதியை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், மனிதாபிமான அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததாக கூறினார்.