
நடிகர் கமலஹாசன் நவ.7ம் தேதி இன்று தனது 63ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்தப் பிறந்த நாளின் போது, தனது அரசியல் பயணத்துக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாகக் கூறியிருந்தார். எனவே கமல் ரசிகர்கள், நற்பணி இயக்கத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இயக்கத்துக்குத் தேவையான நிதியைத் திரட்ட, மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாட காலை முதலே ஆயத்தமானார். சென்னை அருகே உள்ள ஆவடியில், இன்று காலை மருத்துவ முகாம் ஒன்றைத் துவக்கி வைத்தார் கமல். அப்போது பேசிய அவர், மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் மழைக் காலம் என்பதால் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உதவி அவசியம் என நினைக்கிறோம். அதனால் இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். தேங்கிய மழைநீரை அரசு அகற்றிவருவதால் நாங்கள் மருத்துவ முகாமை நடத்துகிறோம்.
நம் நற்பணி மன்றத்தினருக்கு மருத்துவ முகாம் நடத்துவதில் அனுபவம் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த மருத்துவ முகாம் நடந்து வருகிறது. சுமார் 550 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. மருத்துவ முகாம் நடத்துவதில் அரசியல் இல்லை. இதற்கு அரசியலுக்கும் தொடர்பு இல்லை. மக்கள் நலத்திட்ட பணிகளுகு அரசியலை பயன்படுத்திக் கொள்வோம்.
எங்கள் பணிகள் அமைதியாக நடந்து வருகின்றன. முடிந்தவரை உதவ வேண்டும் என்பதற்காக மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறோம். மக்களைப் பாதுகாக்க வேண்டும். மருத்துவ முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களின் முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது... என்று பேசினார்.