
ஜாதிகளை ஒழிப்பதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய பணி என்றும் தலித்தகளை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவுகளை நிறைவேற்றி கேரளா முன்னோடியாக திகழ்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அகில இந்திய மாநாடு கடந்த 4–ந் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.
இதையொட்டி மாநாட்டின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் பழங்காநத்தம் பகுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தேசிய குற்ற ஆவணப்படி தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதில் 2013–ல் 33 ஆயிரம் பேர், 2014–ல் 44 ஆயிரம் பேர் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்றும் தெரிவித்தார்.
ஜாதியை ஒழிப்பதே கம்யூனிஸ்டுகளின் முக்கியப் பணி என்றும் இன்றைய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
கேரளாவில் 4 வகையான சமூகம் இருந்தாலும் தலித் மக்களுக்கான திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தலித் குடும்பத்தில் மாணவர்கள் படிக்க வசதியில்லை என்றால் அவர்களை அரசு படிக்க வைக்கிறது. கேரளாவில் தலித் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதன் மூலமாக தந்தை பெரியாரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.