
திமுக தலைவர் கருணாநிதியை ஓய்வெடுக்க பிரதமர் மோடி டெல்லிக்கு அழைத்ததாக திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத்திருமண விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர், பிரதமர் மோடி கருணாநிதியின் இல்லத்திலிருந்து கிளம்பினார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி, கருணாநிதியுடனான மோடியின் சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தார் எனவும் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் வந்து ஓய்வெடுக்குமாறு கருணாநிதிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக கனிமொழி தெரிவித்தார். சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு புத்தகங்களை கருணாநிதி பரிசளித்ததாகவும் கனிமொழி தெரிவித்தார்.