
உண்மையிலேயே பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு உள்ளது என்றால், பஞ்சாப்பில் பாஜக ஏன் படுதோல்வி அடைந்தது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து மாநிலத் தேர்தல், புதுச்சேரி விவகாரம் தொடர்பாக நாராயணசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. பஞ்சாப்பில் உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே சென்ற முன்னாள் முதல்வர், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தும், பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்தும் ஓரிடம்கூட பிடிக்க முடியவில்லை. உண்மையிலேயே பிரதமர் இந்த நாடு முழுவதும் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்றால், பஞ்சாப்பில் பாஜக ஏன் படுதோல்வி அடைந்தது?
பாஜகவை வீழ்த்துவோம்
காங்கிரஸ் கட்சியினர் யாரும் இந்தத் தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான தலைவர்கள், தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சோனியா, ராகுல் தலைமையில் ஒருமித்த கருத்துக்களை கொண்ட மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால், பாஜகவை எளிதாக வீழ்த்தி விடலாம். அதற்கான வியூகத்தை இப்போதிருந்தே தொடங்க வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவு செய்ய உள்ளனர். ஆனால், முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் இருந்து நாங்கள் பெற்றதைவிட ஒரு பைசா கூடுதல் நிதிக்கூட பெறவில்லை.
புதுச்சேரிக்கு மோடி முட்டுக்கட்டையா?
புதுச்சேரி அரசு நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. மத்தியில் உள்ள பாஜக அரசின், அங்கமாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உள்ளது. முதல்வர் ரங்கசாமி மத்திய அரசோடு இணக்கமாக உள்ளார். பிறகு ஏன் அவரால் முழு பட்ஜெட்டை போடுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை. புதுச்சேரி பாஜக தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களா? அல்லது நரேந்திர மோடி அரசு முழு பட்ஜெட்டை போடக்கூடாது என தடுத்து நிறுத்துகிறாரா? இதற்கு முதல்வர் ரங்கசாமியும், பாஜகவினரும் விளக்கம் அளிக்க வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எந்த அளவுக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்தார்? அந்த நிலை இப்போது இல்லை. பிறகு ஏன் முழு பட்ஜெட்டை போட முடியவில்லை? அப்படியென்றால் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதா? இதை ரங்கசாமி அறிவிக்க வேண்டும்.
காஷ்மீர் ஃபைல்ஸுக்கு தமிழிசை ஆதரவு
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற மதக்கலவரத்தை தூண்டும் படத்தை புதுச்சேரி ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பார்த்துள்ளனர். இப்படத்தின் மீது ஆளுநருக்கு என்ன அக்கறை? இதிலிருந்து ஆளுநர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.” என்று ” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.