
இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மாடலிங் துறையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது சென்னையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது சயித் (27) இவர் கடந்த சில ஆண்டுகளாக மாடலிங்கில் ஈடுபட்டு வருவதுடன் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓட்டேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் சயித்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி, அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் சயித். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் தனது மாடல் புகைப்படங்களை பார்த்துவிட்டு தன்னிடம் பேசும் பெண்களிடமும் இவர் ஆசை வார்த்தை கூறி காதல் வலையை வீசி வந்துள்ளார். இப்படி பல பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தன்னுடன் பழகும் பெண்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டும், விலை உயர்ந்த செல்போன், ஆடை போன்றவற்றை வாங்கி உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளார் சயித். இந்நிலையில் தனது காதலியுடன் ஈசிஆர் பகுதிக்கு முகமது சயித் சென்றபோது எதேச்சையாக அவரது செல்போனை காதலி வாங்கி பார்த்துள்ளார். அப்போது முகமது சயித் பல பெண்களுக்கு காதல் வலைவீசி குறுஞ்செய்தி அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதுகுறித்து காதலுடன் எதையும் காட்டிக் கொள்ளாத அந்தப் பெண், சயித்தின் தொடர்பில் உள்ள இரண்டு பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐடியை மட்டும் குறிவைத்து அந்தப் பெண்களிடம் பேசியபோது காதலன் சயித்தின் காம படலம் வெளியானது. பல பெண்களுடன் அவர் பழகி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இந்நிலையில்தான் மூன்று இளம் பெண்களை ஒரே நேரத்தில் காதலிப்பதாக கூறி தங்கள் மூவரிடமும் ஆயிரக்கணக்கில் பணத்தை பறித்துக் கொண்டு உல்லாசம் அனுபவித்த சயித்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதல் உட்பட மூன்று பெண்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முகமது சயித்தை வேப்பேரி மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை எனவும், விரும்பித்தான் அனைவரும் தன்னுடன் பழகியதாகவும் போலிசாரிடம் முகமது சயித் தெரிவித்துள்ளார். இதுவரை 3 புகார்கள் மட்டுமே போலீசாருக்கு வந்துள்ளது. இதேபோல சயித்தால் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாதித்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் புகார் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட வாலிபர் முகமது செயித்தை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விரைவில் சயித்தை காவலில் எடுத்து யாருடன் எவ்வளவு பணம் வாக்கினார் எத்தனை பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தார் என்பது குறித்து விசாரிக்கு முடிவு செய்துள்ளனர்.