
காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி முறைப்படி தேர்வு செய்யப் பட்டுள்ளார். தலைவராகத் தேர்வான ராகுலுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்து வந்தார் சோனியா காந்தி. கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவி வகித்து வரும் சோனியா காந்திக்கு இப்போது உடல் நலக் கோளாறு அதிகரித்துள்ளது. அதனால், கடந்த 1998ம் ஆண்டு முதல் வகித்து வரும் தலைவர் பதவிக்கு துணையாக, துணைத் தலைவர் பதவி உருவாக்கப் பட்டு, அதற்கு தன் மகன் ராகுலை நியமித்தார் சோனியா.
இந்நிலையில், சோனியாவால் கட்சிப் பணிகளில் அதிகம் ஈடுபட முடியாத நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளித்து, அவரையே தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அன்றே ராகுல் காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஜனநாயக முறைப்படியான கட்சித் தேர்தல் என்பதால், ராகுல் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய, அவரை முன்மொழிந்து அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.
ராகுலுக்கு ஆதரவாகவே 89 மனுக்கள் இருந்தன. எனவே, காங்கிரஸ் தலைவராக ராகுல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகார பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில், காங்கிரஸ் தலைவராகத் தேர்வான ராகுலுக்கு எனது வாழ்த்துகள். நல்ல காலமாக அமைய என் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
நாளொரு கேள்வி என மோடிக்கு எதிராக டிவிட்டரிலும் கூட்டங்களிலும் ராகுல் கேட்டு வருகிறார். குஜராத் தேர்தல் நேரத்தில், ஒருவரை ஒருவர் அதிகம் சாடிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. என்னதான் அடித்துக் கொண்டாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் வாழ்த்து சொல்வது பண்புதானே! மோடியின் டிவிட் இது...