லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும்... மத்திய அரசுக்கு மநீம கட்சி தலைவர் கமல் கோரிக்கை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 27, 2021, 07:36 PM IST
லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும்... மத்திய அரசுக்கு மநீம  கட்சி தலைவர் கமல் கோரிக்கை...!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்திய ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகியாக மத்திய அரசால் பணியமர்த்தப்பட்டுள்ள பிரஃபுல் கோடா பட்டேல் அவர்கள் கொண்டுவந்துள்ள புதிய சட்ட ஒழுங்குமுறையானது, வளர்ச்சி என்ற பெயரில் இலட்சத்தீவுகளின் தொன்மையையும் சுற்றுச்சூழலையும் பாதிப்பதுடன் அப்பகுதி மக்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலையும் சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. 

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “திரு. பிரபுல் பட்டேல் லட்சத்தீவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற நாள் முதலே அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. புதிதாக இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோத சட்டங்களாக. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதே இச்சூழலுக்குக் காரணம்.

எல்டிஏ மசோதா பூர்வகுடிகளின் வாழ்விடங்களைப் பறிக்கும் அபாயம் இருப்பதால் பழங்குடியின மக்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். பாசா சட்டம் தம் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் குரலை ஒடுக்கும் அடக்குமுறை சட்டமாக இருக்கிறது. லட்சத்தீவு பகுதியில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுகளில் அசைவ உணவு இடம் பெறாது எனும் அறிவிப்பு உள்நோக்கம் உடையது.மாட்டிறைச்சி பயன்பாட்டிலும் அரசின் தலையீடு இருக்குமோ எனும் இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது.

இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளவர்களின் குடும்பத்திலிருந்து கிராம பஞ்சாயத்துகளில் உறுப்பினராகவோ, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது எனும் மசோதாவும் ஜனநாயகத்திற்கு எதிரானது. கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் திரு. பிரபுல் படேலின் நிர்வாகம் சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றே இல்லாத தீவில் முன்யோசனை இன்றி கட்டவிழ்த்து விடப்பட்ட தளர்வுகள் இன்று உயிர்களைக் காவு வாங்குகின்றன.

புதிய சட்ட விதிமுறைகள் லட்சத்தீவின் அழகையும், சுற்றுச்சூழலையும், மக்களின் உரிமைகளையும் ஒரு சேர அழிப்பதாக உள்ளது. லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!