
கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அதிமுக பொது செயலாளர் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பதவி பிராமாணம் செய்யும் நிகழ்ச்சி, கவர்னர் வராததால், ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு ஒ.பன்னீர்செல்வம், திடீரென மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்து எழுந்த அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலா மீது பரபரப்பு புகார் கூறினார்.
இதையடுத்து, சசிகலா மீது அதிருப்தி தெரிவித்து இருந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் நேற்று மாலை வரை, ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.சண்முகநாதன் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தார்.
முன்னதாக எம்எல்ஏ சண்முகநாதன், சசிகலா தலைமையில் நடந்த அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நேற்று காலை கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும், அனைத்து எம்எல்ஏக்களையும் சொகுசு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பஸ்சில் சண்முகநாதனும் பயணம் செய்தார்.
எம்எல்ஏக்கள் சென்ற பஸ்கள், கடற்கரை சாலையிலேயே சுற்றி சுற்றி வந்தன. பின்னர், அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன்பு நின்றன. அப்போது, பஸ்சில் இருந்த எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி தலைமறைவானார்.
மேலும், பஸ்சில் இருந்து தப்பிய அவர், அதே பகுதியில் உள்ள முதல்வர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு ஓடினார். அங்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- தமிழகத்தை நடத்துவது ஒ.பன்னீர்செல்வமாகவே இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஓ.பி.எஸ்.ஸுக்கே ஆதரவு தெரிவிக்கின்றனர். இவரை பற்றி நன்கு அறிந்ததால்தான், ஜெயலலிதாவே இவர் தலைமையை ஏற்று நடத்தும் அறிவித்தார். நாமும் அந்த தலைமையை தொடருவோம். ஓ.பி.எஸ். எந்த முடிவு எடுத்தாலும், நான் உற்ற தம்பியாக இருந்து செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.