15 எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ராஜினமா செய்ய தயார் - சசிகலாவுக்கு விட்டு கொடுக்க போட்டா போட்டி..!!!

First Published Jan 5, 2017, 1:02 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் வற்புறுத்தியதால், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

இந்நிலையில் முதலமைச்சர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரும், சில எம்எல்ஏக்களும் சசிகலா உடனடியாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்தி உள்ளார்கள்.

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பித்துரையும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். பொதுச்செயலாளர் பதவியையும் முதலமைச்சர் பதவியையும் ஒருவரே வகித்தால்தான் சிறப்பாக இருக்கும். கட்சியையும் வழி நடத்த முடியும் என சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

முதலமைச்சர் பதவியை ஏற்க சசிகலா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அவருக்கு வழி விடும் வகையில் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய ஓ.பன்னீர் செல்வமும் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த மாற்றம் எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி மட்டும் காலியாக உள்ளது. அந்த தொகுதியில் சசிகலாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் அதிமுக மூத்த தலைவர்களில் பலரும், சசிகலா வேறு ஒரு உறுதியான வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். இதை தொடர்ந்து சசிகலாவுக்காக விட்டுக் கொடுக்கும் வகையில் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் சசிகலாவை தினமும் சந்தித்து, பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக ஆர்வமுடன் கூறி வருகிறார்கள்.

தற்போது அந்த பட்டியலில் சில அமைச்சர்களும் இடம் பிடித்துள்ளனர். அவர்களும் சசிகலாவை சந்தித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முழு மனதுடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சசிகலாவுக்காக பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

சசிகலாவுக்காக ராஜினாமா செய்ய தயாராக இருப்பவர்களில் ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் முதல் இடத்தில் இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நின்று ஜெயித்த தொகுதி என்பதால் அங்கு சசிகலா போட்டியிடக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

எம்எல்ஏக்கள் பட்டியல், தி.நகர் சத்திய நாராயணன், பெரம்பூர் வெற்றிவேல், மேட்டூர் செம்மலை, திருத்தணி நரசிம்மன் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்கள் தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் அது தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் என கூறுகின்றனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் தாமாக முன்வந்து பதவியைத் துறக்க தயாராகி உள்ளனர். இதையடுத்து எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று சசிகலா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் முதல்வர் பதவியை ஏற்பார் என்று அதிமுக மூத்த தலைவர்கள் எதிர் பார்க்கின்றனர்.

click me!