
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர்.
அவர்களில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதி எம்.எல்.ஏவான ஜக்கையனும் ஒருவர். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.
பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி திடீரென சபாநாயகர் தனபாலைச் சந்தித்து, தான் பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஜக்கையன், உட்கட்சி பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என தினகரனிடம் வலியுறுத்தியதாகவும் ஆனால் தினகரன் கேட்கவில்லை என தெரிவித்தார். மேலும் தினகரன் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திமுகவிற்கு சாதகமாக இருந்ததால் அவரிடமிருந்து விலகி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக விளக்கம் அளித்தார்.
ஆனால் அவரைத் தவிர தினகரன் அணியிலிருந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் குடகில் உள்ள ரெசார்ட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய அரசியல் சட்டத்தின் 10வது அட்டவணையின்படி, கட்சி தாவல் தடைச்சட்டத்தின்படி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
கடந்த 10 தினங்களுக்கு முன் தினகரன் அணியிலிருந்து விலகி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததால் தப்பித்தார் ஜக்கையன். இல்லையேல் அவரது பதவியும் அம்போனு போயிருக்கும்.