
அன்னையர் தினமான இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது அன்னை தாயாளு அம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
இன்று அன்றையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தையொட்டி தமிழக பிரபலங்கள், நெட்டிசன்கள், பொதுமக்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாய் தாயாளு அம்மாளை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார். தாய் தாயாளு அம்மாவுக்கு புது புடவை ஒன்றை வழங்கி, இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். மேலும், தாயுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் ஸ்டாலின்.
அப்போது, தாயாளம்மாள், ஸ்டாலினின் கன்னத்தைக் கிள்ளி பாசமழை பொழிந்தார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, பின் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, பாராட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய, உயர்ந்த கோயிலாம் அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில், அன்னையர் தினத்தில் பாசம் மிகுந்த வாழ்த்துகளைப் பெற்றுப் பெரிதும் மகிழ்ந்தேன்.
இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி போற்றி மகிழ்ந்திடுவோம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலினின் இந்த பதிவு இணையதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின், தாயாரை சந்தித்தப் பிறகு, திமுக மகளிர் அணி மற்றும் சிறுபான்மை அணியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில், மாநில நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு நடத்தி வருகிறார்.