அவனியாபுரம் போலீஸ் தடியடி - மு.க.ஸ்டாலின் கண்டனம்

First Published Jan 14, 2017, 5:20 PM IST
Highlights

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கவுதமன் உள்ளிட்டவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி தாக்குதலை அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டித்துள்ளனர். அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது, நாங்கள் துணை நிற்போம் என திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:  

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிகோரி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

தங்களது பொங்கல் கொண்டாட்டங்களை ஒத்திவைத்துவிட்டு போராட்டக் களத்தில் தமிழ் ஆர்வலர்களும், திரையுலகினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று உரிமைக்குரல் எழுப்பிய நிலையில், திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்ட பலர் மீது தமிழக காவல்துறை கடுமையான தடியடி நடத்தியிருப்பது மனிதநேயமற்ற கொடுஞ்செயல்.

 காவல்துறையின் இந்த அராஜகச் செயலை தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழர்களின் வீரவிளையாட்டை நடத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கோட்டைவிட்ட தமிழக அரசு, தனது காவல்துறையை ஏவி, தமிழர்கள் மீது தடியடி நடத்துவதும் சித்திரவதைகள் செய்வதும் தமிழினத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். 

ஈவு இரக்கமற்ற இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உரிய நடவடிக்கைகளில் அ.தி.மு.க அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டங்களை அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டு ஒடுக்கிவிட முடியாது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும். 

இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஜனநாயக முறையில் நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் தி.மு.கழகம் என்றும் துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

click me!