நாமக்கலில் தீபாவுக்கு ஆதரவாக அம்மா திமுக துவக்கம்..!!

First Published Jan 14, 2017, 5:00 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதைதொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பதவியேற்றார். இதில் சசிகலா, பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு, அதிமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கானோர், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தொண்டர்களிடம், தீபா பேசுகையில், நான் நிச்சயம் வருவேன். அதற்கான காலம் விரைவில் வரும். அதுவரை தொண்டர்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் நாமக்கல் அடுத்துள்ள நெய்காரன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தீபா ஆதரவு புதிய கட்சி துவக்க விழா  நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்ல ராசாமணி தலைமை வகித்து, கட்சியின் புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் பேசுகையில், அதிமுகவுக்கு தலைமை தாங்கும் தகுதி சசிகலாவுக்கு இல்லை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தீபா தான். 

அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தீபாவுக்கு துணையாக, இம்மாவட்ட அதிமுக தொண்டர்கள் உள்ளனர்’’ என்றார். இந்த கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். தீபாவுக்கு மத்திய அரசு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் இடையே சசிகலா ஆதரவாளர்கள், தீபா ஆதரவாளர்கள் என பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே நகரில் தீபாவின் ஆதரவாளர்கள், பேரவையை துவக்கியுள்ளதால்,அப்பகுதி அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது, தற்போது தமிழகம் முழுவதும் தீபா ஆதரவாளர் கூட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி தர மறுப்பதாக தீபா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

tags
click me!