
ஆடி போயி ஆவணி வந்தாக்க டாப்பா வந்துடுவாம் எம் மவன்!...என்று சரண்யா பொன்வண்ணன் நம்புவது போல் ஸ்டாலினும் இந்த ஆட்சி கவிழும், கவிழுமென மாசாமாசம் நம்பிக் கொண்டிருக்கிறார்.
ஆர்.கே.நகரில் தான் போட்டியிடையில் வெறும் நான்கு நாட்கள்தான் பிரச்சாரம் செய்தாராம் ஜெயலலிதா, அந்த ஸ்டைலில் மருது கணேஷூக்காக வெறும் 3 நாட்களைத்தான் ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின். அந்த வகையில் நேற்று அங்கே பிரச்சாரத்தில் மைக் பிடித்தவர்...
“இன்றைக்கு இங்கே நடக்கின்ற இடைத்தேர்தலை ஆர்.கே.நகர் மக்கள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலின் வெற்றி அடுத்து வரும் பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும். ஓட்டுக்கு பணம் தருபவர்கள் பற்றி ஆதாரத்தோடு தேர்தல் கமிஷனில் புகார் தந்தோமே தவிர தேர்தலை நிறுத்தம் நோக்கமெல்லாம் எங்களுக்கு இல்லை, தேர்தலை சந்திப்பதில் எந்த தயக்கமும் இல்லை.
இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரக்காரணமே ஜெயலலிதாவின் மறைவுதான். ஆனால் அந்த மரணமானது இந்த நொடி வரையில் மர்மமாகவே இருக்கிறது. ஜெயலலிதா மரணத்தின் முதல் குற்றவாளி பன்னீர்செல்வம்தான். ஆனால் அவரே அந்த மரணத்துக்கு நீதி வேண்டி தர்ம யுத்தம் நடத்தியதுதான் அவலம்.
சரி இவர்களெல்லாம் ஆடும் வரை ஆடட்டும், இன்னும் 3 மாதங்கள்தான். அதோடு பொதுத்தேர்தல் வந்துவிடும். பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராகவே இருக்கிறது.” என்றார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வினுள் பிரச்னைகள் வெடித்த காலத்திலிருந்தே ஸ்டாலின் இதோ வருது, அதோ வருது என்று போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் தேர்தல் புலிதான் வந்த மாதிரி இல்லை. ஆளும் அ.தி.மு.க.வுக்கு 3 வருடங்கள் காலம் இன்னும் இருக்கையில் அதற்குள் பொதுத்தேர்தல் வரவேண்டுமென்றால் அவ்வாட்சி கவிழும் வகையில் ஸ்டாலின் ஏதாவது அரசியல் அதிரடி செய்திருக்க வேண்டும். ஆனால் எதையுமே செய்யாமல் மூணு மாசம்! நாலு மாசம்! ஒரேயொரு மாசம்! என்று ஏலம் விட்டுக் கொண்டிருந்தால் கடைசியில் பிம்பிலிக்கிபிளாப்பியாகிவிடும் ஆட்சி கனவு...என வகையாய் நக்கலடிக்கிறார்கள் விமர்சகர்கள்.