
பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்து பிறந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம். இந்துக்களை சமரசமேயில்லாமல் வசைபாடினார் கருணாநிதி. ஆலய திருவிழாவில் தீ மிதித்த தன் அமைச்சரை ‘காட்டுமிராண்டித்தனம்’ என்றார். நாடாளுமன்றத்தில் காவி தரித்து அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் சந்நியாசி எம்.பி.க்களை ‘பண்டாரங்களும், பரதேசிகளுமாய் நிரம்பி வழிகிறது நாடாளுமன்றம்’ என்றார். ஆனால் மறந்தும் கூட சிறுபான்மையினரின் மத சடங்குகள் பற்றி வாய் திறந்ததில்லை அவர். காரணம் அவர்களின் வாக்கு வங்கி.
அவரின் மகனான ஸ்டாலினும் துவக்கத்தில் நாத்திக அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்காக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சிகளை துவங்கிய பின் ஸ்டாலினின் போக்கில் மாற்றம் துவங்கியது. துர்கா மிக ஆழமான இறைபக்தி உடையவர். தமிழகத்தில் அவர் வழிபடாத பிரசித்தி பெற்ற ஆலயங்களே கிடையாது. அவர் கோயிலுக்கு செல்வதை பத்திரிக்கையாளர்கள் மறைந்திருந்து படமெடுத்தால் கூட ‘அண்ணே! நானே கோயிலுக்கு முன்னாடி நின்னு போஸ் கொடுக்குறேன். மறைஞ்சிருந்தெல்லாம் எடுக்க வேண்டாம். நல்ல ஆங்கிள்ள எடுங்களேன்.’ என்று சொல்லி நெளிய வைத்து ஆச்சரியப்படுத்துவார்.
மனைவி சொல்படித்தான் கடந்த பொது தேர்தலின்போது நமக்கு நாமே! நடந்த ஸ்டாலின் தென் தமிழகத்திலெல்லாம் பல ஆலயங்களுக்கும் சென்றார்.
இதுமட்டுமில்லாமல் ‘தி.மு.க.வில் இருப்பவர்களில் 90%பேர் இந்துக்கள்’ என்றும் போட்டாரே ஒரு போடு. ஆனாலும் அரசியலுக்காக பா.ஜ.க.வை விமர்சிக்கையில் மட்டும் ‘பாசிச, மதவாத சக்திகளை வேரறுப்போம்.’ என்பார்.
இப்படியாக நாத்திகம் மற்றும் ஆத்திகத்துக்கு இடையில் ஊசலாடும் ஸ்டாலின், தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் ‘வெல்லத்தில் ஒரு பிள்லையார் செய்து, அதில் ஒரு பகுதியை கிள்ளி, அந்த பிள்ளையாருக்கே படைப்பது போல, மக்களின் பணத்தை கொள்ளை அடித்து, அதில் சிறு தொகையை, வாக்காளர்களுக்கே கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஆயுத பூஜை போன்ற இந்து பண்டிகைகளன்று கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளை ‘விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி’ என்று வாய்கூசாமல் நாத்திகம் பேசுவார்கள். ஆனால் இன்று மக்களுக்கு புரிவதற்காக ‘வெல்லப்பிள்ளையார்’ என்று ஆத்திகம் பேசியிருக்கிறார்.
இதைக்குறிப்பிடும் அரசியல் விமர்சகர்கள், ‘கொள்கையாவது, கோட்பாடாவது, ஓட்டு கிடைத்தால் சரி! இதுதானே இன்றைய அரசியல்’ என்கிறார்கள்.
சர்தான்.