தியேட்டர் தியேட்டராய் சுற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்...! இடைவெளியில் பாப்கார்னா இல்ல சமோசாவா?

By thenmozhi gFirst Published Oct 28, 2018, 4:01 PM IST
Highlights

கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதி மாதங்கள் அது. ஸ்டாலின் மகன் உதயநிதியின் ‘ரெட்ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனமும், அழகிரியின் மகன் தயாநிதியின் ‘கிளவுட் நைன் மூவிஸ்’ நிறுவனமும் தமிழ் சினிமாவை ஆட்டி வைப்பதாக ஒரு புகார் எழுந்தது.

கடந்த தி.மு.க. ஆட்சியின் இறுதி மாதங்கள் அது. ஸ்டாலின் மகன் உதயநிதியின் ‘ரெட்ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனமும், அழகிரியின் மகன் தயாநிதியின் ‘கிளவுட் நைன் மூவிஸ்’ நிறுவனமும் தமிழ் சினிமாவை ஆட்டி வைப்பதாக ஒரு புகார் எழுந்தது. ‘கருணாநிதியின் வாரிசுகள் தமிழ் சினிமாவை விழுங்குகிறார்கள்.’ என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

அதற்கு மிக கடுமையாக ரியாக்ட் பண்ணிய முதல்வர் கருணாநிதி “என் குடும்பத்தினர் எதை செய்தாலும் ‘வாரிசு, வாரிசு’ என்கிறார்கள், ஏன் சிவக்குமாரின் மகன்கள் நடிக்க வரவில்லையா? டி.ராஜேந்திரன் மகன் நடிக்கவில்லையா? கமல்ஹாசனின் மகள் ஹீரோயினாகவில்லையா?” என்று ஆரம்பித்து பல பேரை உதாரணம் காட்டி பொளந்தெடுத்துவிட்டார். 

கருணாநிதியின் சாடல் தமிழ் திரையுலகில் பெரும் ஆத்திரத்தை உருவாக்கியது. விளைவு, 2011 தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக ரகசியமாக ஆனால் மிக அழுத்தமாக செயல்பட்டது தமிழக திரையுலகம். அ.தி.மு.க.வின் ஆட்சி வந்தமர்ந்தது. (ஆனால் முதல்வரான ஜெயலலிதா அப்புறம் பல சினிமாக்களின் ரிலீஸுக்கு செக் வைத்தது தனி கதை.)

இந்நிலையில் இப்போது பெரும் அரசியல் எழுச்சியை சந்தித்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளது தி.மு.க. அடுத்து எப்போது சட்டசபை தேர்தல் நடந்தாலும் ஜெயித்து, முதல்வர் ஆகியே தீர வேண்டும் என்று வெறியாய் உழைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எல்லா தரப்பு மனிதர்களையும் கன்வின்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.
 


இந்நிலையில் தங்கள் கட்சிக்கும், தமிழ் திரையுலகத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியே நிரப்பியே ஆகவேண்டும்! என்று அவரது மகன் உதயநிதி, அப்பாவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதனால் கடந்த சில காலமாகவே தமிழ் சினிமாக்கள் மீது அநியாயத்துக்கு பாசம் காட்டுகிறார் தளபதி. 

பரியேறும் பெருமாள்! படத்தை சென்று பார்த்தவர் அதன் இயக்குநர் மாரிசெல்வராஜ், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ஆகியோரை பாராட்டி தள்ளினார். சரி ஏதோ கருத்துள்ள படங்களைப் பார்த்து சமூகத்துக்கு மெசேஜ் சொன்னதுக்காக பாராட்டுவார் போல! என்று நினைத்தால் இப்போது ‘ராட்சசன்’ படத்தையும் பார்த்திருக்கிறார் ஸ்டாலின். அந்த குழுவையும் தாறுமாறாக பாராட்டி தள்ளியிருக்கிறார். 

இந்த ஐடியாக்களின் போது உதயநிதியும் உடன் இருக்கிறார். ஆக இப்படியாக தி.மு.க.வுக்கும், திரையுலகுக்கும் இடையில் நெருக்கத்தை கொண்டு வரும் ஸ்டாலினின் முயற்சி ‘கமல், ரஜினி என ஹீரோக்கள் அரசியலில் நுழைவதால் திரையுலகில் அவர்களுக்கு எதிரானவர்களை தனக்கு சாதகமாக திருப்பும் முயற்சியுமாகும்.’ என்கின்றனர் சிலர். 

வெள்ளிதோறும் வெளியாகும் படங்களின் குழுவினர் இப்பொதெல்லாம் உதயநிதியை தொடர்பு கொண்டு, ‘அப்பாவை அழைச்சுட்டு வர்றீங்களா உதய் சார்!’ என்கின்றனர், அவரும் ஓ.கே. என்றால் ”இடைவேளை டைம்ல அப்பாவுக்கு என்ன கொடுக்கலாம்? பாப்கார்னா இல்ல சமோசாவா?” என்று கேட்டு கலகலக்கின்றனராம். 

அப்புறம் தளபதி, அப்டியே சர்கார் படத்தையும் பார்த்துட்டு விஜய்யை பாராட்டுவீங்களா?

click me!