அடுத்தடுத்து தட்டித் தூக்கும் செந்தில் பாலாஜி... சமாளிக்கும் டி.டி.வி..!

By Asianet TamilFirst Published Feb 16, 2019, 11:23 AM IST
Highlights

அமமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை பல அசைன்மெண்டுகளை வழங்கியிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவை பலமாக்குவது, அதிமுக, அமமுகவிலிருந்து நிர்வாகிகளை இழுப்பது எனப் பல வேலைகள் இதில் அடக்கம்.

அமமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை பல அசைன்மெண்டுகளை வழங்கியிருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் திமுகவை பலமாக்குவது, அதிமுக, அமமுகவிலிருந்து நிர்வாகிகளை இழுப்பது எனப் பல வேலைகள் இதில் அடக்கம். கட்சியில் சேர்ந்தவுடனே மாவட்ட பொறுப்பாளர் பதவியையும் செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை கொடுத்துவிட்டதால், தனது வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் செந்தில் பாலாஜி. 

இந்நிலையில் கரூர் மாவட்டத்தைத் தாண்டி அண்டை மாவட்டமான ஈரோட்டில் அமமுக நிர்வாகிகளை செந்தில் பாலாஜி தூக்கி ஸ்டாலினிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். அமமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணிதரன், மாணவர் அணி இணை செயலாளர் எம். பிரபு உள்ளிடோர் அமமுகவிலிருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். 

இதுதொடர்பான செய்தி, திமுக தரப்பில் வெளியிடப்பட்டது. அதேவேளையில் பருவாச்சி பரணிதரனும் எம்.பிரபுவும் கட்சியிலிருந்து நீக்கி, ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரான எஸ்.ஆர். செல்வம், மாநகர் மாவட்ட செயலாளர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார் என தினகரன் அறிவித்தார். அமமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களைத்தான் ஸ்டாலின் கட்சியில் சேர்த்திருப்பதாகவும் அந்த நிலைமையில்தான் திமுக இருக்கிறதா என்றும் திமுகவை தினகரன் கிண்டல் செய்திருந்தார். 

ஆனால், அமமுகவில் நீக்கப்பட்டவர்கள் பற்றிய தினகரனின் அறிவிப்பில் நேற்றைய தேதிதான் உள்ளது. இதனால், இதைக் குறிப்பிட்டு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஈரோடு நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தார்களா அல்லது திமுகவில் சேர்ந்த பிறகு அவர்கள் அமமுகவிலிருந்து நீக்கப்பட்டார்களா என்ற விவாதம் திமுக - அமமுகவினர் மத்தியில் பட்டிமன்றமாக மாறியுள்ளது.

click me!