ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

First Published Apr 1, 2018, 12:18 PM IST
Highlights
M.K. Stalin Pressmeet


காவிரி பிரச்சனை விவகாரத்தில் வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு, கடந்த 29 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வரையில் அமைதி காத்துவிட்டு, ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியுள்ளது.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி பிரச்சனை குறித்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டத்தில் அதி முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறினார்.

வருகிற 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் அல்லாமல் மற்ற கட்சியினரும், முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

போராட்டத்துக்கு அனைத்து தரப்பைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஒரு விழிப்புணர்வை காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்த உள்ளதாக கூறினார். காவிரி உரிமை மீட்பு பயணத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த உள்ளதாகவும் கூறினார். காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் பேசி விரைவில் அறிவிப்போம் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழகம் வரும்போது, கருப்புக்கொடி காட்டுவதாக முடிவெடுத்துள்ளோம். விவசாயிகள், பொதுமக்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற செய்வதில் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.

click me!