
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டுக் கொண்ட போதும், அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்தார். மேலும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.