MK Stalin guide : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றி... உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட்ட முதல்வர்!

By Asianet TamilFirst Published Dec 18, 2021, 10:06 PM IST
Highlights

கடந்த அக்டோபரில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அக்கட்சியினருக்குக் கட்டளையிட்டார். அதுபோலவே இப்போதும் 100 சதவீத வெற்றியை ஈட்ட கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 77 மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள்,  எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். முதல் நிகழ்ச்சியாக ‘தளபதி மு.க. ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் விரைவில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தல் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் முக்கியமான கோரிக்கைகள் பற்றி திமுக எம்.பி.க்கள் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் ஜனவரி 5-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரும் தொடங்க உள்ளது. எனவே, இதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய சில அமைச்சர்களும் நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் பேசியதாகவும் கூறப்படுகிறது, பல விஷயங்கள் பேசப்பட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல அறிவுரைகளை கட்சி நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையிலும் இதையே வலியுறுத்தி பேசியதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை நாம் பெற வேண்டும். அதற்கேற்ப நம் பணிகள் அமைய வேண்டும்.

தேர்தலுக்கு முன்பாக விரைவாக பூத் கமிட்டியை நிர்வாகிகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 10 பேர் கட்டாயம் இடம் பெற வேண்டும். இந்த பூத் கமிட்டியில் 2 மகளிர், 4 இளைஞர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.  மேலும் கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு ஒதுக்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளுடன் மாவட்ட அளவிவிலேயே மாவட்ட செயலாளர்கள் பேசி உடன்பாட்டை எட்ட வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அக்கட்சியினருக்குக் கட்டளையிட்டார். அதுபோலவே இப்போதும் 100 சதவீத வெற்றியை ஈட்ட கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

click me!