HBD MKStalin: மு.க.ஸ்டாலின்.. தொண்டர் முதல் முதல்வர் வரை.. அரசியல் வரலாறு ஒரு சிறப்பு பார்வை..!

By Asianet TamilFirst Published Mar 1, 2022, 9:07 AM IST
Highlights

ஆட்சியை திமுக இழந்த பிறகு, எமர்ஜென்சியின் ஒரு பகுதியாக திமுகவினர் தமிழகத்தில் அதிகளவில் கைது செய்யப்பட்டனர். முரசொலி மாறனையும் ஸ்டாலினையும் கைது செய்ய போலீஸார் கோபாலபுரம் வீடு தேடி வந்தபோது ஸ்டாலின் வீட்டில் இல்லை. கட்சி கூட்டத்துக்காக மதுராந்தகம் சென்றிருந்தார். வந்தவுடன் ஸ்டாலினை அனுப்பி வைக்கிறேன் என்று போலீஸாரிடம் சொன்னார் கருணாநிதி. அதன்படியே கருணாநிதி செய்தார். ஸ்டாலின் மிசா கைதியாக சிறை செல்ல நேர்ந்தது. 

தமிழகத்தின் முதல்வர், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் 69-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். திமுகவில் ஒரு தொண்டராக தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய மு.க. ஸ்டாலின் இன்று முதல்வராக உயர்ந்திருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளை ஸ்டாலின் கொண்டாடும் வேளையில், அவருடைய அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த  திமுக தலைவருமான கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மகனாக 1953-ஆம் ஆண்டில் பிறந்தார் மு.க. ஸ்டாலின். தன்னுடைய தந்தை அரசியல்வாதி என்பதால், இயல்பாகவே அரசியல் அவருக்குள் ஊடுருவியது. திமுக முதன் முறையாக ஆட்சியைப் பிடித்த 1967-ஆம் ஆண்டில் ஸ்டாலினுக்கு 14 வயதுதான். ஆனால், அப்போதே திமுகவின் வெற்றிக்காக பிரசாரம் செய்தவர் ஸ்டாலின். ஆனால், தன்னுடைய எதிர்கால அரசியலுக்கு ஸ்டாலினுக்கு தொடக்கப் புள்ளியாக இருந்த நிகழ்வு 1968-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இன்று திமுகவில் முக்கிய அணியாக விளங்கி வரும் இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக 1968-ஆம் ஆண்டில் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஸ்டாலின் உருவாக்கினார். 

பள்ளிப் பருவத்திலேயே தீவிரமாக அரசியலில் ஈடுபாடு காட்டிய மு.க. ஸ்டாலின், தனது வீடு அமைந்திருந்த சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாகவும் செயல்படத் தொடங்கினார். இன்னொரு புறம், தன்னுடைய கல்லூரிப் படிப்பையும் சென்னை நியூ கல்லூரியில் ஸ்டாலின் நிறைவு செய்தார். வரலாறு பிரிவில் பட்டம் வென்ற ஸ்டாலின், பின்னர் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். 1970-களின் தொடக்கத்தில் திமுக வட்டப் பிரதிநிதியாக இருந்த மு.க. ஸ்டாலின் சென்னையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். அப்படியே கட்சி பிரசாரத்திலும் ஈடுபடத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக 1973-ஆம் ஆண்டில் திமுக பொதுக்குழு உறுப்பினராக ஆனார் மு.க. ஸ்டாலின். ஒரு புறம் தமிழகத்தின் முதல்வர், மறுபுறம் திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் என்ற அந்தஸ்து இருந்தாலும், கட்சியில் பிறரைப் போலவே தானும் ஒருவராக இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஸ்டாலின். அதன்படி நடக்கவும் செய்தார்.

1975-ஆம் ஆண்டு ஸ்டாலினின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் ஸ்டாலின் துர்காவை கரம் பிடித்தார். ஒரு புறம் திருமண வாழ்க்கை, இன்னொரு புறம் அரசியல் வாழ்க்கை என ஸ்டாலினுக்கு வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்தது. அந்த ஆண்டில்தான் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல் செய்தார். ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துக்கொண்டிருந்த எமர்ஜென்சியை எதிர்த்து தெற்கிலிருந்து கருணாநிதி உரக்கக் குரல் கொடுத்து கொண்டிருந்தார். இதனால் வட இந்திய அரசியல் தலைவர்கள் தமிழகத்தை திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்த கருணாநிதி ஆட்சியை 1976-ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று இந்திரா காந்தி டிஸ்மிஸ் செய்தார். ஆட்சியை திமுக இழந்த பிறகு, எமர்ஜென்சியின் ஒரு பகுதியாக திமுகவினர் தமிழகத்தில் அதிகளவில் கைது செய்யப்பட்டனர். முரசொலி மாறனையும் ஸ்டாலினையும் கைது செய்ய போலீஸார் கோபாலபுரம் வீடு தேடி வந்தபோது ஸ்டாலின் வீட்டில் இல்லை. கட்சி கூட்டத்துக்காக மதுராந்தகம் சென்றிருந்தார். வந்தவுடன் ஸ்டாலினை அனுப்பி வைக்கிறேன் என்று போலீஸாரிடம் சொன்னார் கருணாநிதி. அதன்படியே கருணாநிதி செய்தார். ஸ்டாலின் மிசா கைதியாக சிறை செல்ல நேர்ந்தது. 

திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே ஸ்டாலின் சிறைக்கு சென்றார். அப்போது துர்கா கர்ப்பிணியாகவும் இருந்தார். தன் மனைவியை பெற்றோர் பாதுகாப்பில் விட்டுவிட்டுதான் ஸ்டாலின் சிறைக்கு சென்றார். அப்போது சிறையில் பல இன்னல்களுக்கு திமுகவினர் ஆளாயினர். இதற்கு ஸ்டாலினும் தப்பவில்லை. சிறையில் போலீஸாரின் தாக்குதலுக்கு ஆளானார் ஸ்டாலின். ஒரு கட்டத்தில் சிறையில் ஸ்டாலினை கண்மூடித்தனமாக போலீஸார் தாக்கிய வேளையில், தன் தலைவரின் மகனை அடித்தே கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், ஸ்டாலின் மீது விழுந்த அடி, உதையை வாங்கி உயிர்விட்டார் சிட்டி பாபு. என்றாலும், இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் திருப்பு முனையானது. சிறையில் ஸ்டாலின் இருந்த வேளையில்தான் உதயநிதியும் பிறந்தார். 

கருணாநிதியைப் போல சினிமாவிலும் ஆர்வம் கொண்ட ஸ்டாலின், 1978-ஆம் ஆண்டில் திரைப் படத்தையும் தயாரித்தார். ஒரு சில காட்சிகளிலும் நடித்தார். 1980-ஆம் ஆண்டில் ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் மைல்கல் தருணம் நடந்தேறியது. இந்த ஆண்டில்தான் திமுகவில் இளைஞரணி என்ற பிரிவை கருணாநிதி தொடங்கினார். முழுக்க முழுக்க ஸ்டாலினால் இந்த இளைஞரணி கட்டமைக்கப்பட்டது. அவரே அதன் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் கட்சியை வலுப்படுத்த 6 பேர் கொண்ட கமிட்டியை கருணாநிதி அமைத்தார். அதில் ஸ்டாலினும் ஒருவராக இடம் பெற்றார். 

1970-களில் தொடக்கத்தில் பதின் பருவத்தில் கட்சிக்குள் அடியெடுத்து வைத்த ஸ்டாலின் தொடக்கத்தில் திமுக அமைப்பாளராகவும், பின்னர் 1984-இல் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதே ஆண்டில்தான் ஸ்டாலின் முதன் முறையாகத் தேர்தல் அரசியலிலும் பங்கெடுத்தார். 1984-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய கோபாலபுரம் வீடு அமைந்திருக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டார். ஆனால், இந்திரா காந்தியின் மரணம், எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் வீசிய அனுதாப அலையில் திமுக தோல்வியடைந்தது. ஆயிரம் விளக்கில் ஸ்டாலினும் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

1988-இல் ‘ஒரே ரத்தம்’ படத்தில் நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின், ‘குறிஞ்சி மலர்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பரவலாக கவனம் ஈர்த்தார். 1989-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக சட்டப்பேரவைக்கு சென்றார் ஸ்டாலின். திமுகவும் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் 1991-ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தல் வந்தது. ஆனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அனுதாப அலையால் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

1996-ஆம் ஆண்டில் மீண்டும் ஆயிரம் விளக்கு  தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் வென்றிருந்தார். எல்லோரும் அவர் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் களமிறக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மேயர் என்ற பெருமையையும் ஸ்டாலின் பெற்றார். ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் சென்னையில் 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சென்னை மாநகரம் நெரிசலில் இருந்து தப்பிக்க சிங்காரச் சென்னையாக மாற்றும் வகையில், அன்று ஸ்டாலின் திட்டமிட்ட இந்தப் பாலங்கள் இன்றும் உதவிக்கரமாக இருந்து வருவது கண்கூடு.

இதனையடுத்து 2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஸ்டாலின், மீண்டும் இரண்டாவது முறை உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அன்றைய ஜெயலலிதா அரசின் காழ்ப்புணர்ச்சியால் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருக்கும் தடை சட்டத்தைக் கொண்டு வந்தார். இதனால், மேயர் பொறுப்பை உதற வேண்டிய நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.  

2006-ஆம் ஆண்டில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற ஸ்டாலின், திமுக அமைச்சரவையில் முதன் முறையாக இடம் பெற்றார். கருணாநிதி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் பணியாற்றினார். இதே காலகட்டத்தில் சிறிது காலம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த ஸ்டாலின், 2008-ஆம் ஆண்டில் திமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டார். 2009- ஆம் ஆண்டில் துணை முதல்வராகவும் ஸ்டாலின் பதவி உயர்வு பெற்றார். இந்தக் காலகட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழகமெங்கும் சென்று ஸ்டாலின் வழங்கிய சுழல் நிதி வழங்கும் நிகழ்வுகள் பேசப்பட்டன. சென்னையை நவீனப்படுத்துவதிலும் குடிநீருக்காக அல்லப்பட்ட தருமபுரி மாவட்ட மக்களுக்காக ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவற்றை முன்னின்று செயல்படுத்தி பாராட்டைப் பெற்றார் ஸ்டாலின். இன்று சென்னை பெருநகரின் அடையாளமாகியுள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2009-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தவரும் மு.க. ஸ்டாலின் தான். 

கடந்த 2011-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். அங்கும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்ட ஸ்டாலின், 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். வயது முதிர்வால் கருணாநிதி உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வில் இருந்த வேளையில், தலைவருடைய பணிகளை செய்ய வசதியாக திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார். ஆனால், 49 ஆண்டுகள் கட்சித் தலைவராகவும் 5 முறை முதல்வராகவும் இருந்த கருணநிதி 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று காலமானபோது, கருணாநிதியின் இடத்துக்கு இயல்பாகவே வந்தார் ஸ்டாலின். கருணாநிதியால் படிப்படியாக செதுக்கப்பட்ட ஸ்டாலின், திமுகவின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றார்.

ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, 2021-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. முதல்வராக முதன் முறையாக ஸ்டாலின் பொறுப்பேற்று, கடந்த 10 மாதங்களாக சிறப்பாக ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறார் ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றி ஆட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார். அவருடைய நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் அளிக்கும் வகையில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு அமோக வெற்றியைப் பரிசாக அள்ளித் தந்திருக்கிறார்கள் தமிழக மக்கள்! மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் மக்களின் நல்லாட்சியோடும் பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!

click me!