AIADMK: இதே மாதிரி செய்தீங்க ஆட்சியில் நீடிக்க முடியாது.. திமுகவை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Mar 1, 2022, 7:13 AM IST
Highlights

என் மீதும் போலீசை வைத்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை ஜெயிலில் போட்டு விட்டால் அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று தி.மு.க. தலைவர் நினைக்கிறார். அவரது எண்ணம் பலிக்காது. 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையை பார்க்கும்போது தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பாதுகாக்கும் முயற்சியை அவர் முன்னெடுக்கிறாரா? என  எண்ணத் தோன்றுகிறது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் சிக்னல் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ;- நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நபரை பிடித்துக் கொடுத்ததற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நேரத்திலும் கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொடுக்கப்பட்ட பழைய புகார்களை தூசிதட்டி எடுத்து மீண்டும் மீண்டும் அவரை வெவ்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கு.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையை பார்க்கும்போது தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பாதுகாக்கும் முயற்சியை அவர் முன்னெடுக்கிறாரா? என  எண்ணத் தோன்றுகிறது. எனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததுமே அதிமுகவை முடக்கும் நினைப்பில் கேலிக்கூத்தான விஷயங்களை செய்து வருகிறனர். இந்த நடவடிக்கைகளின் மூலம் அதிமுகவை முடக்க முடியாது.

தற்போது உள்ள இரட்டை தலைமைக்கு கட்டுப்பட்டு அதிமுக தொண்டர்கள் கழகப் பணிகளை செய்து வருகின்றனர். கட்சி தலைமை முடிவெடுத்தால் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தற்போது இருக்கும் இரட்டை தலைமையால் கட்சிக்குள்ளும், தொண்டர்களுக்கும் எந்த மனக் குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார். 

அதேபோல், ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில்;- என் மீதும் போலீசை வைத்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை ஜெயிலில் போட்டு விட்டால் அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று தி.மு.க. தலைவர் நினைக்கிறார். அவரது எண்ணம் பலிக்காது. அ.தி.மு.க. தோற்றுவிடவில்லை. நாம் தனியாக நின்று தி.மு.க.வுக்கு சவால் விட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதுபோன்ற நிலை நீடித்தால், நீங்கள் ஆட்சியில் நீடிக்க முடியாது. தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஆட்சியில் இருந்து இறக்குவோம்” என்று கூறினார்.

click me!