ஈகோ பிரச்சனையில் அமைச்சர்கள், கொரோனாவில் கோட்டைவிட்ட தமிழக அரசு..!! மு.க ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2020, 1:44 PM IST
Highlights

நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்ததால் மேலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார். 
 

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை தமிழக அரசு தொடர்ந்து மறைத்துவருவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான ஈகோ பிரச்சினைகளை களைந்து, நோய்தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதுடன், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்காமல் வெளியிட வேண்டும், இல்லையெனில் தமிழக அரசுக்கு எதிராக திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் என அவர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தமிழகத்தில் மார்ச் 7-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியது, ஆனால் அதை பொருட்படுத்தாத தமிழக அரசு மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருந்து காலதாமதம் செய்ததின் விளைவாக தமிழகத்தில்  வைரஸ் தொற்றுதீவிரமாக பரவியுள்ளது. 

அதன் பிறகு மத்திய அரசு ஊரடங்கு அறிவித்த பின்னரே தமிழக அரசு விழித்துக் கொண்டது, ஊரடங்கு அறிவிப்பதில் தமிழக அரசு தொடர்ந்து மெத்தனமாக நடந்து கொண்டதால் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் நோய்தொற்று கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏப்ரல் மாதத்தில் 1%  இருந்த நோய்த்தொற்று தற்போது 10% அதிகரித்துள்ளது. டெல்லியில் நாளொன்றுக்கு 990 பேர் தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், சென்னையில் சராசரி நோய்த்தொற்று நாள் ஒன்றுக்கு 1597 ஆக பதிவாகி வருகிறது. இதுவரை 435 பேர் உயிரிழந்துள்ளனர், ஆனால் 0. 7 % தான் என தமிழக அரசு எளிதாக கடந்து செல்கிறது, கொரோனா பரவல் காரணமாக  ஏராளமான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அன்றாட உணவுக்கே மக்கள் போராடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர், எனவே குடும்பம் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம், 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு இதன் மூலம் 3, 850 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும், இது பட்ஜெட்டில் வெறும் 2% தான் என வலியுறுத்தினோம்  ஆனால் தமிழக அரசு அதைச் செய்ய முன்வரவில்லை. 

அரசியல்  மனமாச்சரியங்களை கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி நோய்தோற்றை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினோம், ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை, தங்களால் பிரதமருடன் பேச முடிந்த அளவிற்கு கூட முதலமைச்சரை சந்தித்து பேச முடியவில்லை, ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை தவறாக வழி நடத்தியுள்ளார், ஆனால் அதற்கு மாறாக சென்னையில்  95% அளவுக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது. பத்து பேரை சோதித்தால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி எந்த முன்னெச்சரிக்கையுமின்றி நான்கு நாட்கள் முழு ஊரடங்கு என அறிவித்து, அதன் விளைவாக மக்கள் காய்கறி கடைகளிலும், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் அதிகமாக கூடியதன் விளைவாக சென்னையில் நோய்த்தொற்று பன்மடங்கு அதிகரித்துள்ளது. இப்படி தவறான நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் அதிகரிக்க தமிழக முதலமைச்சர் காரணமாக இருந்துள்ளார். நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்ததால் மேலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார். 

இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என தமிழக அரசு கூறுகிறது, அப்படியெனில் ஏன் இவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.? உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் தமிழக அரசு வெளிப்படைத்தன்மை இன்றி  நடந்து கொள்கிறது,  ஒருவர் இறந்தால் அவரின் மரணத்தை பதிவுசெய்ய 21 நாட்கள் எடுத்துக் கொள்கிறது, இதுவரை 236 பேரின் மரணம் கணக்கில் சேர்க்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் சுகாதாரத்துறை செயலாளரிடம் கேட்டதற்கு, இது நடைமுறையில் உள்ள சிக்கல் என கூறி அவர் எளிதில் கடந்து செல்கிறார்,  இறப்பு மறைக்கப்படுவது மட்டுமல்ல இதன் மூலம் கொரோனாவால் உயிர்நீத்த 236 பேரின் மாண்பு மீறப்பட்டுள்ளது என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.  நாங்கள் முன்பே முகக்கவசங்களையும், நடமாடும் மருத்துவமனைகளையும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம்,  ஆனால் அப்போது அதெல்லாம் தேவையில்லையென திமுகவை கிண்டல் செய்த அதிமுக அரசு இப்போது முகக்கவசங்களையும், நடமாடும் மருத்துவமனைகளையும் அமைத்துக் கொண்டிருக்கிறது. 

 

மொத்தத்தில் நாங்கள் கேட்பதெல்லாம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா உச்சத்தை எட்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கிறது, எனவே அதற்குள் தயவு செய்து மருத்துவ கட்டமைப்புகளை உயர்த்துங்கள், ஏழை எளிய குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யுங்கள், அமைச்சர்கள் மட்டத்திலான  ஈகோக்களையும், அதிகாரிகள் மட்டத்திலான அதிகாரப் போட்டிகளையும் களைந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள், உயிரிழந்தவர்களின் இறப்புகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவியுங்கள், கொரோனா நிவாரணத்தில் நடக்கின்ற ஏராளமான முறைகேடுகளை களைந்து நோய்த்தொற்றின் அளவை கட்டுப்படுத்த முன்வாருங்கள் இல்லையென்றால் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
 

click me!