சீனா அல்லது பாகிஸ்தானின் நிலத்தை கைப்பற்ற இந்தியா விரும்பவில்லை..!! நிதின் கட்கரி திட்டவட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2020, 12:51 PM IST
Highlights

மாவோயிச பிரச்சனையை வென்றெடுப்பதா அல்லது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதா என்ற நிலையில் நாடு இருந்து வருகிறது.
 

சீனா அல்லது பாகிஸ்தானின் நிலத்தை இந்தியா கைப்பற்ற விரும்பவில்லை, அங்கிருந்து ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா ஆக்கிரமிப்பு செய்யாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாங்கள் விரும்புவதெல்லாம் அமைதியைத் தான் என அவர் கூறியுள்ளார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது கடந்த மே 5-ஆம் தேதி பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் இருநாட்டு படைவீரர்களும் மோதிக்கொண்டனர். அதில் இருதரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில், உள்ளூர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் பதற்றம் தணிந்தது. அதைத்தொடர்ந்து  மே 9-ம் தேதி சிக்கிமை ஒட்டியுள்ள நகுலா பாஸ் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது,  பேச்சுவார்த்தையின் மூலம் அந்தப் பிரச்சனையும் உடனே  தீர்க்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மே 22-ஆம் தேதி  கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம் சீன எல்லையில் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி சீனா அங்கு ஏராளமான படைகளைக் குவித்தது. 

பதிலுக்கு இந்திய ராணுவமும் ஏராளமான படைகளையும், ராணுவத் தளவாடங்களையும் குவித்து சீனாவை கண்காணித்து வருகிறது, இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, இதனால் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. இந்நிலையில் பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், நேற்று குஜராத்தில் நடைபெற்ற பேரணியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உரையாடினார். அப்போது பேசிய அவர், நரேந்திர மோடி  அரசின் சாதனைகளை விளக்கினார், மேலும் நாட்டின் உள் மற்றும் வெளிபாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா அமைதியை நிலைநாட்டி வருவது மிகப்பெரிய சாதனை என்றார், மாவோயிச பிரச்சனையை வென்றெடுப்பதா அல்லது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதா என்ற நிலையில் நாடு இருந்து வருகிறது. 

ஆனாலும் நாங்கள் அமைதியை விரும்புகிறோம், வன்முறையை அல்ல, இதுவரை  சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா கைப்பற்ற எண்ணவில்லை, எல்லை விரிவாக்கம் செய்யும் ஆதிக்க மனப்போக்கு கொண்ட நாடு அல்ல இந்தியா, சீனாவின்  நிலத்தையோ பாகிஸ்தான் நிலத்தையோ இந்தியா விரும்பவில்லை நாங்கள் விரும்புவதெல்லாம் அமைதி, நட்பு, அன்பு. மேலும் இதற்காக ஒன்றிணைந்து வேலை செய்வதையே விரும்புகிறோம் என அவர் கூறினார். எல்லை விரிவாக்கவாதியாக மாறுவதன் மூலம் நாங்கள் இந்தியாவை வலிமையாக்க முடியாது, அமைதியை நிலைநாட்டுவதன் மூலமே இந்தியாவை வலிமையாக்க விரும்புகிறோம் எனக் கூறிய அவர், 1971-இல் போரில் வெற்றி பெற்ற பிறகும், பங்களாதேஷில் ஒரு சுதந்திர அரசாங்கத்தை நிறுவ இந்தியா உதவியது."போரில் வென்ற பிறகு எங்கள் நாடு ஷேக் முஜிபுர் ரஹ்மானை பங்களாதேஷின் பிரதமராக்கியது, அதன்பிறகு எங்கள் வீரர்கள் திரும்பினர்", என்று அவர் கூறினார். நாங்கள் அங்கு ஒரு அங்குல நிலத்தை கூட கைப்பற்றவில்லை, பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்தை நாங்கள் விரும்பவில்லை நாங்கள் விரும்புவது அமைதி, நட்பு, அன்பு என அவர் உறுதிபட கூறினார்.

 

click me!