சந்திரசேகர ராவை காங்கிரஸ் கூட்டணிக்கு இழுக்க முயற்சி..? மு.க. ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பின் பின்னணி!

By Asianet TamilFirst Published May 14, 2019, 8:23 AM IST
Highlights

மத்தியில் ராகுல் பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாக சந்திரசேகர ராவுக்கு கடிதம் எழுதியது. தெலங்கானாவில் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர ராவ் பக்கம் சாய்ந்தபோதும், இதைப் பற்றி அலட்டிக்கொள்ளாத காங்கிரஸ், அவருடைய ஆதரவை பெறுவதில் குறியாக உள்ளது.
 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை காங்கிரஸ் பக்கம் இழுக்க ஸ்டாலின் சந்திப்பை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொண்டதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணிக்கு முயற்சி செய்துவருகிறார் தெலங்கானா முதல்வரும் டிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ். அதன் ஒரு பகுதியாக கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ், தமிழகத்தில் ஸ்டாலினைச் சந்தித்து பேச திட்டமிட்டார். ஆனால், உடனடியாக அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படவில்லை. ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பை சந்திரபாபு நாயுடு தடுத்துவிட்டார் என்று தகவல்கள் உலா வந்தன.


இந்நிலையில் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் நேற்று மாலை சந்தித்துபேசினார். ஆனால், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. ஆனால், இந்தச் சந்திப்பின்போது மூன்றாவது அணிக்கு ஸ்டாலினை சந்திரசேகர ராவ் அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏற்கனவே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், தேர்தல் முடிவுக்கு பிறகு விரிவாக சந்தித்து பேசலாம் என்று தெரிவித்துவிட்டதாக கட்சி வட்டாரங்களில் சொல்லப்படுகின்றன.


ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் சந்திரசேகர ராவை காங்கிரஸ் பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மத்தியில் ராகுல் பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாக சந்திரசேகர ராவுக்கு கடிதம் எழுதியது. தெலங்கானாவில் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர ராவ் பக்கம் சாய்ந்தபோதும், இதைப் பற்றி அலட்டிக்கொள்ளாத காங்கிரஸ், அவருடைய ஆதரவை பெறுவதில் குறியாக உள்ளது.


சந்திரசேகர ராவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக அவரோடு நெருக்கமாக உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் யாராவது பேசினால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி கருதிவந்தது. அந்த அடிப்படையில்தான் தடைப்பட்டு கிடந்த ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே ராகுலை பிரதமராக முன்மொழிந்த ஒரே தலைவர் ஸ்டாலின் என்பதால், அவர் மூலமாக சந்திரசேகர ராவை காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை விரும்பி கேட்டுகொண்டதன்பேரிலேயே சந்திரசேகர ராவை சந்திக்க ஸ்டாலின் ஒத்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் சந்திரசேகர ராவை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. திமுகவுக்கும் - சந்திரசேகர ராவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. சந்திரசேகர ராவ் கடந்த 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடித்து, மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அப்போது அந்த அணியில் திமுகவும் இடம் பெற்றிருந்தது. திமுக விரும்பி கேட்ட கப்பல்துறையை சந்திரசேகர ராவ் விட்டுக்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய சந்திப்பில் வெறுமனவே இரு தலைவர்களும் தங்களுடைய விருப்பங்களை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மே 23-க்கு பிறகு தேர்தல் முடிவை பொறுத்து இருவரும் டெல்லியில் சந்தித்து பேச முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.  

click me!