மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவை உடனே ரத்து பண்ணுங்க ! தேர்தல் கமிஷனிடம் பாஜக அதிரடி புகார் !!

By Selvanayagam PFirst Published May 14, 2019, 7:34 AM IST
Highlights

தேர்தல் பிரசாரத்தில் மதவாதம் பற்றி பேசியதால் கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார் மனு அளித்து உள்ளது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது,  சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி  ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே  என்றும் பேசினார். கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் பாஜகவைச்  சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் இது தொடர்பாக ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. மகாத்மா காந்தியை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி” என்று பேசி உள்ளார். அதிக அளவில் திரண்டிருந்த முஸ்லிம் மக்கள் முன்னிலையில் ஓட்டுக்காக வேண்டுமென்றே இவ்வாறு அவர் பேசி இருக்கிறார். இது 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123 (3) கீழ் ஊழல் நடைமுறை என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே, இந்திய அரசியல் அமைப்பின் 324-வது அட்டவணைப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு, கமல்ஹாசன் குறைந்தபட்சம் 5 நாட்களாவது தேர்தல் பிரசாரம் செய்யாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

அது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழக பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.சவுந்திரராஜன் புகார் மனு அளித்து உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய கமல்ஹாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

click me!