
ஒகி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் லட்சத் தீவு, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஒகி புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலால் குமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 450-க்கும் அதிகமான மீனவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் ஒகி புயல் குறித்தும், இயற்கை சீரழிவுகள் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், ஒகி புயலால் கேரளாவின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. எனவே இதை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய நாமக்கல் தொகுதி எம்.பி. பி.ஆர்.சுந்தரம், ஒகி புயலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும். வானிலை பற்றி முன்னறிவிப்பு செய்வதற்காக சேட்டிலைட் ரேடியோ சேனல் ஒன்றைத் தொடங்கவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுக்கு ரூ.325 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது போதுமானது அல்ல என தெரிவித்தார்.
இந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்றும், அவர்களுக்கு தோளோடு தோள் நிற்கும் என்றும் கூறினார்.
புயல் பாதிப்பு குறித்து, மத்திய நிபுணர் குழு வரும் 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்திலும், கேரளாவிலும் ஆய்வு செய்யும் என்றும், அதையடுத்து, அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நிதி உதவி அளிக்கும்என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இயற்கை சீரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மறுத்த அவர், புயலால் ஏற்படும் பாதிப்புகளை தீவீரமான இயற்கை பாதிப்பாக கருதி நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
காணாமல் போன மீனவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.