
ஜெ.வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்படாமலிருக்க டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் முன் ஜாமின் கோரி தாக்கல்செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரது புகைப்படங்களை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதிலிருந்து அவர் இறந்த பிறகுதான் அவரை பார்க்க முடிந்தது. அதுவரை அவர் சிகிச்சை பெற்ற புகைப்படமோ வீடியோவோ வெளியிடப்படவில்லை.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான எந்தவிதமான ஆதாரங்களாக இருந்தாலும் சமர்ப்பிக்குமாறு விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுக சாமி அறிவுறுத்தியிருந்தார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டபோதிலும், அப்போதெல்லாம் கூட அதுதொடர்பான எந்தவிதமான ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ இருப்பதாக திவாகரனின் மகன் மற்றும் தினகரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலை, தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள் அந்த வீடியோ வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தேர்தல் விதிமீறல் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார். வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம், விசாரணை ஆணையம் ஆகியவற்றின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வெற்றிவேல் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் தன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், வெற்றிவேல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் வெற்றிவேல் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.