
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகிய அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர்.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 14-ம் தேதி அன்று தீர்ப்பளித்தது.
மேலும் 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவை அவரது ஆதரவு அமைச்சர்கள் அடிகடி சிறைக்கு சென்று பார்த்து வந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க ஏற்கனவே அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகிய 4 பேரும் இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.
பின்னர், அமைச்சர்கள் 4 பேரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினர்.