
எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமம்.
இங்குதான் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த வீடு மற்றும் நில புலன்கள் உள்ளன.
சிலுவம்பாளையம், தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, நங்கவள்ளி உள்ளிட்ட அவரது தொகுதி மற்றும் அந்த தொகுதியை சேர்ந்த பகுதி மக்களையும் அதிமுக நிர்வாகிகளையும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார் பழனிச்சாமி.
இதற்காக 4 நாட்கள் முகாமிட்டு அப்பகுதி மக்களின் குறைகள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் சிலுவம்பாளையத்தில் உள்ள தன் சொந்த வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து அமைச்சர்கள் அனைவரும் சிலுவம்பாளையத்துக்கு படையெடுத்துள்ளனர்.
நாளை முதல்வர் எடப்பாடி தன் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரனின் வீடு மற்றும் அதிமுக நிர்வாகிகளிடமும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தன்னிடமும் அமைச்சர்களிடமும் போலீசார் விசாரணை செய்யக்கூடும் என்பதாலும் எடப்பாடி தனது சகாக்களுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது.